Thursday, 5 February 2015

சிறுகதை சித்திரம் : ஆயிஷா - இரண்டு பக்கங்கள் (ஆசிரியர்:அனிசா புதல்வன் )

அறிமுக காட்சி :

         நாகூரிலிருந்து திருச்சி நோக்கி இரண்டு கார்கள் பாய்ந்துக் கொண்டிருந்தன. ஒன்றன்பின் ஒன்றாக வல்லம் வளைவு . வேகத்தினால் அதிர்ந்தது சாலையோரமாய் அருகிலிருந்த பள்ளிவாசலின்  கட்டியிருந்த ப்ளக்ஸ் போர்டு. ப்ளக்ஸ் போர்டில் இவ்வாறு எழுதியிருந்தது.

    "4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! -அல்குர்ஆன்"

                                                




ஆயிஷா -பக்கம் ஒன்று :

இடம்  - திருச்சி விமான நிலையம் , புறப்பாட்டு முனையம் .
ப்ளைட் நம்பர்  - SA1627.
பயண தேதி  - 20.10.2012
நேரம்  - இரவு 0930

         "சரியா பதினொரு மணிக்கு ப்ளைட் டிப்பார்ட் ஆயிடும் . 12க்கு கொழும்பு போயிடும் . மணி 1க்கு லண்டன் கனெக்சன் ப்ளைட் கொழும்பு ஏர்போர்ட்டுலேர்ந்து" வாப்பா மரைக்காயரிடம் நசீர் ஒப்பித்துக்கொண்டிருந்தான். ஆயிஷாவை  கல்யாணம் பண்ணி ஒரு மாதம் கழித்து கிளம்பும் முதல் பயணம்.

            ஆயிஷாவுடைய புர்காவின்  முகத்திரை தண்ணீரில் நனைக்காமலே கண்கள் கண்ணீரால் அதை  நனைத்துக் கொண்டிருந்தது நசீரின் பிரிவு பிரளயம் செய்து கொண்டிருந்தது . விமான நிலையத்தின் வண்ணவிளக்குகள் அவளுடைய மனதை லயிக்கவில்லை. விமான சப்தங்களும் பிரமாண்டமான வெளிச்சங்களும் கவலையை கூட்டி கொண்டே சென்றன.

              ஒரு வழியாய் அவளுக்கு ஆறுதல் கூறிவிட்டு இருவரின் பிணைந்த விரல்கள் ஒன்றுக்கொன்று விடைகூறிவிட்டு தூரமாய் நசீர் நகர்ந்து விமான நிலையத்தினுள் சென்றான். அவளுடைய வளையல்கள் அவனை போகவேண்டாம் என்று சத்தமிட்டு கொண்டிருந்தன . கண்ணாடி வழியாய் நசீரின் கைகள் ஆட்டும் போது அதன் மீது கண்ணீர் வழியும் கண்களை பொருத்தி அவன் கைகள் கண்ணீரை துடைக்காதா என்ற பரிதவிப்புடன் நின்றாள் ஆயிஷா.


ஆயிஷா -பக்கம் இரண்டு :

இடம் - திருச்சி விமான நிலையம் , வருகை வாயில் .
பயண தேதி  - 20.10.2012
நேரம் - இரவு 0930

      "உம்மம்மா(பாட்டி) சுல்தான் அப்பா(தாத்தா) பிளைட் SA1627 சரியா 10:45 மணிக்கு வந்துடும்னு அனவுன்சு பண்றாங்க " 15 வயதேயான ரிஸ்வான்  பால்முகத்தோடு ஆயிசம்மாவின் கைகளை இறுகப்பிடித்தான்.

        "சவுதிக்குனு போயி வருசம் ஏழு ஆச்சு . ஐந்து  மகளையும் கட்டி கொடுக்குறதுக்காக அங்கே தன்னோட  வாழ்க்கய கரச்சுட்டாரு. கபில்ட்ட(முதலாளி) சொல்லி இதோட முடிச்சுட்டு வரப்போறேனு சொன்னாங்க . ஊர்ல ரெண்டு மாசம் இருந்துட்டு கும்பகோணம் பக்கம் மளிகை கடை வச்சுக்க போறேன் " என்று சொன்னதும் நினைவுக்கு வந்து போனது .

        "கலியாணம் பண்ணிண புதுசுல ரெட்ட வட சங்கிலி வாங்கி கேட்டது. முப்பது வருசத்துக்கு அப்புறம் வாங்கிட்டு வர்ராங்க .மூணு நாளைக்கு முன்னாடி அவுக போன் பண்ணி ரெட்ட வட சங்கிலிய ஸ்கைபுல(skype) காமிச்சாங்க .  கண்ணுலே நிக்குது. இனிமேல்  ஓசியிலே நகை வாங்கி போட்டுட்டு விசேசத்துக்கு போகனும்னு அவசியம் இல்லை. அதை மர்யம்மாவிடம் பல் இளிச்சு வாங்குறதுக்கும் இனி தேவையில்லை ".

        மர்யம்மா இரவலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு தன் கணவர் சுல்தான் குறித்த எண்ணங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு நினைவு  திரும்பினார் ஆயிஷாம்மா.

திருப்புமுனை காட்சி:

மறுநாள் காலை ....

     ஆயிஷா வீட்டில் பலத்த  அழுகை சத்தமாக இருந்தது.    டீ.வியில் முக்கிய செய்தி ஓடி கொண்டிருந்தது .

"கொழும்பிலிருந்து லண்டன் சென்ற விமானம் அண்டார்க்டிக்கா பனிப்பாறையில் மோதி விபத்து ".

ஆயிஷம்மா வீட்டில் போன் ஒலித்தது மறுமுனையில் பேசிய  கொழும்பு விமான நிலைய அதிகாரி .

" ரியாத்திலிருந்து கொழும்பு வந்த விமானத்தில் பயணி சுல்தான் என்பவர் மாரடைப்பால் இறந்துவிட்டார் . அவர் உங்களது உறவினரா ?" என்று ஆயிஷம்மாவின் மூத்த மகளிடம் கேட்டார்.

                  இரண்டு குடும்பமும் சுருண்டு விழுந்தது .

இறுதி காட்சி :
  
           திருச்சியிலிருந்து நாகூர்  நோக்கி இரண்டு ஆம்புலன்சுகள் பாய்ந்துக் கொண்டிருந்தன. ஒன்றன்பின் ஒன்றாக வல்லம் வளைவு . வேகத்தினால் அதிர்ந்தது சாலையோரமாய் அருகிலிருந்த பள்ளிவாசலின்  கட்டியிருந்த ப்ளக்ஸ் போர்டு. ப்ளக்ஸ் போர்டில் இவ்வாறு எழுதியிருந்தது.

      4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! -அல்குர்ஆன் .

நாகூர் பள்ளிவாயில் காலை பத்து மணி  சுல்தானும் நசீரும் இறுதி ஜனாஸா தொழுகையில் வைக்கப்ட்டிருந்தனர்.

அங்கு நின்ற இரண்டு இளைஞர்கள் இப்படி பேசிகொண்டிருந்தனர் .

   "எப்படி பார்த்தாயா மரணம் இருவருக்கும் . ஒருத்தர் ஊர் போய் சேரவில்லை. இன்னொருவர் ஊர்வந்து சேரவில்லை ".

அருகில் அழுக்குப்படிந்த முதியவர் அவர்களை நோக்கி "ஏம்ப்பா உன்னோட மவுத்து உன் பின்னாடி நிக்குது. அதுக்கு நீ என்ன சேர்த்து வச்சுருக்கே? ".  

கோபமாய் முதியவரை நோக்கி
"போயா பைத்தியம் இப்புடி தான் நீ எதயாவது ஒளறிட்டு இருப்பே ".

மஃரிபு நேரம் அதே பள்ளிவாசல் கூட்டமாய் நின்றது .

"இன்னக்கி என்ன ஒரே மய்யத்தா விழுகுது . யாருப்பா மவுத்து ?".

   "காலையுல மைய்யத் அடக்கிட்டு போன ரெண்டு வயசுபசங்க பைக்ல போனப்ப ஆக்சிடென்டாம் ".
அங்கு இன்னொரு ஜோடி மீண்டும் தொடர்ந்தது . "பார்த்தாயா இந்த ரெண்டு பேருக்கும் மவுத்த ?"

அங்கே ஒரு குரல் ஒலித்தது .

"ஏம்ப்பா உன்னோட மவுத்து உன் பின்னாடி நிக்குது. அதுக்கு நீ என்ன சேர்த்து வச்சுருக்கே? ".
   
                   ( கதை  முற்றும். ஆனால் மரணங்கள் நீங்கள் எங்கிருந்த போதும் பின் தொடரும் .... )

3 comments:

  1. மரணம் நிச்சயம்...

    ReplyDelete
    Replies
    1. மரணம் நிச்சயம் ஒவ்வொரு ஆன்மாவும் சுவைக்க வேண்டிய பானம்

      Delete
    2. ராஜ் முகம்மது இன்னொரு சிறுகதையான நல்லடியார் சிறுகதையும் மரணம் குறித்தே எழுதப்பட்டுள்ளது அதையும் வாசியுங்கள்

      Delete