Monday, 2 February 2015

ஆரீபு காக்காவும் ரஸூல் ஊதுபத்தியும் - தொடர்கதை -4


                                      

          "யாரும் செய்யாத ஒண்ண  முஸ்தபா மாமா செஞ்சுப்புட்டாருனு ஊரு பூரா பேச்சு. மாமா கோவப்பட்டதில்லை அன்னைக்கு கோவப்பட்டு நின்னத பாத்து ஊரு திருவிழாவுல  சாமி ரெண்டு ஆடுற மாதிரி தோணுச்சு ".
   தொறந்துவுட்ட எரளிவய கம்மா தண்ணி மாத்ரி மாமா ஆரம்பிச்சாரு சாத்துன கதவு முன்னாடிமாமி கதவுக்கு பின்னாடி நின்னு கேட்டுட்டு இருந்துச்சு.
"அவன் அவன் என்னென்னமோ ஊருல  பண்றாண். நான் ஹலாலா ரெண்டாம் கலியாணம் பண்ணுனது தப்பா ? நான் பண்ணுனது தப்புனா அவனுங்க செஞ்ச பாவத்துக்கு  என்ன பேரு சொல்லுவே ".
" கட்டிக்கிட்ட மாப்புள ஹராம பண்ணிட்டு  வந்து நிக்கலனு சந்தோசப்படுறீயா அத விட்டுட்டு ? ."

    "நீயே சொல்லு அஞ்சு வவுத்து தொழுவயுல  ஒண்ண விட்டுருக்கேனா, இல்ல கள்ளு கட சாரயம் ஒரு வா குடிச்சிருப்பேனா, இல்ல நான் எங்கயாவது பல்ல காட்டிட்டு நின்னுருப்பேனா . ஒனக்கு என்ன கொற வச்சுருக்கேன் ?".

     "ஒங்களுக்குலாம் ஊருல இருக்கிறவங்க மாத்ரி அல்லாவுக்கும் ரசுலுக்கும் மாத்தமா நடக்ற ஆளுங்கள தான  புடிக்கும் ? ஹராமா எப்டி வேணும்னாலும் இருந்துக்கோ  ஆனா ஹலாலா ஒரு கலியாணம் பண்ணிட்டு வந்து நின்னுறாதே ? இதான ஒங்களுக்கு வேணும் ".    

   "ஒன்னுக்கு ரெண்டா கட்டி அதுல ஒன்னுல கொற வச்சா எங்கண்ணுல அல்லா குத்தமாட்டானா ? சொவரம்மா ஒங்கண்ண மறைக்கனும்முனா நான் இதுகள கூட்டிட்டு வந்துருப்பேனா ? உன்னட்டேர்ந்து நான் மறச்சுடலாம் . ஆனா அல்லாவோட பார்வயுல  மறஞ்சு போற தெறம ஒனக்கு இருக்கா ? எனக்கிருக்கா ? ஒலகத்துல யாருக்கு இருக்கு ."

         " இப்பகூட ஒனக்கு நான் பயப்புடல . ஆனா அல்லாவுக்கு பயந்து தான் இங்க நிக்கிறேன். அனாதய ஆலமரத்துல நின்ன கொடிக்கொளத்து மாட்ட ஊட்டுல வச்சுருந்தே . அதுக்கு அடிபட்டு நின்னப்ப மருந்துபோட்டே. மூணு நாளு கழிச்சு கோனாரு மாட்ட தேடி வந்தப்ப அந்த மாடு கோனரா தேடல. உன்ன தேடி பல நாளு கொடிக்கொளத்துலேர்ந்து வந்து வாசல்ல நின்னது  ".
"இன்னக்கி இந்த ரெண்டு புள்ளயுலும் உம்மாவ இழந்துப்புட்டு கொடிக்கொளத்து மாடு கணக்கா உன்னோட ஊட்டு வாசல்ல வந்து  நிக்குது".

       " ஆமா இன்னக்கி எம்புள்ள இதுரெண்டும் தாய இழந்து நிக்குது . அவ பொல்லா நோயுல போயி சேந்தா . புள்ளய முன்ன போனா உம்மா வாப்பவுக்கு சொர்கத்துல துவா செய்யுஞ் சொல்லுவாங்க . இன்னக்கி உம்மா முன்னுக்க  போயி  இந்த  புள்ளைங்களுக்கு  சொர்க்கத்துல துவா செய்யுது ".

      "அல்லா ஒலகத்துல ஒன்னுக்கொண்ணு ஒதவுற அமைப்ப வச்சுருக்கான்.மேடு பள்ளம்னு வாழ்க்கையுல வச்சுருக்கான்சரிசமாம அவன் வைக்காம உட்டதுக்கு ஒரு காரணம் இருக்கு சொவரம்மா . மனுசப்பயல் ஒருத்தொருக்கொருத்தன் ஒதவனும்னு தான் அவன் அப்புடி வச்சுருக்கான். ஆனா மனுசப்பயல் கெடச்ச வரைக்கும் சுருட்டுறான். சுருட்டுறவனோட கபுரு சும்மா சுருண்டு கெடக்குது . எத்தன சீமான பாத்துட்டேன் அத்துன சீமானும் ஈமானோட போனான்னு யாருக்கும்  தெரியல . "

              "ரொம்ப சத்தமா பேசுனவங்க எல்லாம் மய்யத்தாங்கொல்ல போயி  மவுனாமாயிடுறான். அந்த மவுனத்தோட பாசை கபுருல போய் கேட்டவன் எங்கயும் சத்தமா பேசமாட்டான். ஊருக்கு ஊரு போனா கட்டு சோத்த கட்டுற சொவரம்மா அல்லாவோட ஊருக்கு நாம போவ ரொம்ப நேரமில்ல. இந்த அனாத புள்ளயள ஒன்னோட  நெஞ்சோட அணச்சுக்க ,ஓன்னோட  மடியுல அதுகள படுக்கபோட்டு அதுக தலய பாசமா வருடிவுட்டா அதுக தலயுல எவ்ளோ முடியிருக்கோ அவ்ளோ ஒம்பாவம் கொட்டிபோவும் . போற எடத்துக்கு புண்ணியத்த கட்டிசோத்தா  கட்டிக்கோ ".

       பூட்டிய கதவு மெல்லமாய் திறந்தது . கடினமான மனக்கதவுகள்  துருப்பிடித்து திறக்கமுடியா நிலையில் உள்ளதுகருணை எண்ணைகளை கதவிடிக்கினில் ஓரமாய் ஊற்ற வேண்டியுள்ளது. இன்று கதவுகள் மெல்லமாய் சிரித்துக்கொண்டு திறக்கிறது . கருணையும் அன்பும் சாவிகளாய மாறி பல பூட்டுக்களை திறக்கிறது. மனித மனம் பல ரகசியங்களை அடைத்துப் பூட்டபட்ட கோட்டைகள். சில மனித உள்ளங்கள் பூட்டப்பட்டு அச்சாவிகள் சாக்கடையில் எறியப்படுகின்றன மீண்டும் அது திறந்திடா வகையில். சில சாவிகள் தான் மனிதநேய ஆணிகளில் கொழுவப்படுகின்றன . அதை திறப்பது அன்பு வழிந்தோடும் இது போன்ற தருணங்களில் தான்

   சொவரம்மா மாமி திறந்து ஒரு வார்த்தை தான் முஸ்தபா மாமாவிடம் இப்படி சொன்னாள்.
"கதவ தொறந்தது ஒனக்காக இல்லைய்யா . இந்த ஒண்ணு மண்ணு தெரியா பச்சபுள்ளவளுக்கு தான். நீ வாம்மா தாயி " என்று குழந்தைகளை அழைத்துப்போனாள்.

      ஒரு கதவு திறந்து மறு கதவு திறப்புக்கும் அடைப்புக்கும் இடைப்பட்ட நிலையில் வீடு புகுந்தார் முஸ்தபா மாமா . நம்பிக்கையுடன் உள்ளே நடந்தார் அதுவும் திறந்துவிடும் என்று .
மாமா வின் நினைவுகளில் இருந்து திரும்பினார் ஆரீபு காக்கா  . மதிய சாப்பாட்டு அழைப்பை வயிறு விடாமல் எழுப்பிக் கொண்டிருந்தது . சைக்கிளை வேகமாய் இழுத்து சென்றது வயிற்றின் அழைப்பு .

     காற்று சற்று வேகமாய் அடித்துக்கொண்டிருக்கும் வேளையில் காற்றை எதிர்த்து நடைபோட்டுக் கொண்டே  ஆரீபு காக்காவின் சைக்கிள் வீட்டை நெருங்கியது .
    வாசலில் பேரன் ரஸூல் விளையாடி கொண்டிருந்தான். ஆரீபு காக்கவிடம் ஓடிவந்து "ஆரிபப்பா முட்டாய் தாப்பா " என்றான் .

      ஜூப்பாவில் ஒட்டிக் கொண்டு பிசுபிசுத்த இரண்டு மிட்டாய்களை நீட்டினார். "இ்ந்தாத்தா ரசூலு " . கழுகு தரையில் நிற்க்கும்  கோழி குஞ்சுகளை துழாவி செல்லுவது போல் ரசூலின் கைகள் அதை பறித்து சென்றன

   கேள்வி குறியாக நின்ற கலிமா ,நினைவில் நிற்க்கும் சாவண்ணா , எந்த ஓர் பாவம் அறியா ரஸூல் என்று மனம் முழுவதும் கவலைகளை நிரப்பிக்கொண்டு தன் கவலையில் கண்ணீர் கலங்க. அல்லாஹ்விடம் இப்படி பிரார்த்தித்தார் ஆரீபு காக்கா .
              

    "யா அல்லா ரப்பே இந்த பச்சபுள்ள ரசூலு மொகத்துக்காகவது அந்த சாவண்ணா பயல ஊருக்கு கொண்டாந்துரு ".

      கண்ணீரின் இரண்டு சொட்டுக்கள்  கலிமா ஆரீபு காக்காவிற்க்காக கொண்டு வைத்த செம்புத்தண்ணீரில் கலந்தது. எப்போதும் தேன் அமுதமாய் தித்திக்கும் தாமரைக்குளத்து தண்ணீர் அன்றைக்கு மட்டும் ஆரீபு காக்காவிற்க்கு உப்பு கரித்தது .

     வழமையாய் தன் பிரிய மகள்களுக்காகவும் நேசத்துக்கு பாந்திரமான பேரனுக்கும் ஏற்க்கனவே வாங்கி வைத்திருந்த கோனார் கடை போண்டாவை கலிமாவின் கைகளில் திணித்தார் .

  "இந்தம்மா கலிமா தங்கச்சியளுக்கும் ரசூலுக்கும் ஒன்னோட  அம்மாவுக்கும் கொடும்மா ".

       கலிமா தன்னை விட்டும் நகரும் வரை சந்தோசமாக தன்னை கலிமாவிடம் காட்டிக் கொண்ட ஆரீபு காக்கா வேகமாக சதா காலமும் அழுது கொண்டிருக்கும் மனதின் அழுக்கோலத்தை முகத்தில் கொண்டுவர கண்களில் நீர் கொப்பளித்து வழிந்தோடியது . இது போன்ற ஒரு நாளில் தான் சாவண்ணா மலேசியாவில் ஒரு மலாய்காரியின் பிடியில் சிக்கிய விடயத்தை கலிமாவிடம்  கூற முயன்றார்.

           "அன்னைக்கி தேங்கா மூடி காஜரா ட்ட வியாவரத்த முடிச்சுட்டு  கலிமாட்ட எல்லாத்தயும் சொல்லிடலாம்னு முடிவு பண்ணி தான் சைக்கிள எடுத்துட்டு வந்தேன். தாங்க முடியா சோகம் . எதிர்காத்து அன்னைக்கி என்ன சைக்கிள்ள தள்ளுறதுக்கு பதிலா என்னோட மனகஷ்டம் தள்ளிட்டு இருந்துச்சு . ஒவ்வொருத்தனும் பொண்ணு நல்லா வாழனும்னு தான் கலியாணம் பண்ணி கொடுக்குறாங்க. ஆனா தின்ன சோறு செரிக்கிறதுக்கு முன்னாடி கழுத்தறுக்குற மாதிரி உட்டுட்டு ஓடி போறாங்கே . இவனுங்களுக்கு எதுக்கு கலியாணம். பொண்டாட்டி புள்ளயள காப்பாத்த தெரியாதவன் என்ன ஆம்புள . எந்த மொதல் போட்டும் அந்த நஷ்டத்த சரி கட்டலாம். பொம்புள புள்ளயளுவள கட்டி கொடுத்து வர்ர  நஷ்டம் இந்த சாவண்ணா மாதிரி ஆளுங்களால வந்தா அந்த நஷ்டம் பெரும் நஷ்டம் . ஒரு காலமும் அத திருப்ப முடியாது. பொம்புள புள்ள பெத்தா அதோட சேத்து கொஞ்சம் பொறுமய பெத்துக்கனும் திட்டுனா ரோசபடாத அளவுக்கு சொரண இல்லாம இருக்கவும் கத்துக்கனும்கலியாணம் பண்ணுணப்ப ஜமாலும் என் தங்கச்சி ஜொஹராவும் என்ன ஒரு வழி பண்ணிட்டாங்க. கலியாணம் பண்ணுனா சொகத்த மட்டும் தான்  இவனுங்க ஏத்துக்குறாங்க ஆனா சுமைய  நம்ம தலயுல கட்டுறாங்கே . "

            "தலப்புள்ள கலியாணமே இப்புடியா போச்சு . இன்னும் என்னோட ரெண்டு கொமரு ஊட்டுல நிக்குது . கலிமாவோட  கலியாணத்த பல அறுப்புக்கு மத்தியுல தான் நான் நடத்துனர். சேவும்மாவோட காத அருக்கல ஆனா  சேவும்மா காதுல கெடந்த கம்மல அறுத்துட்டு போயிட்டாங்க, கைய அறுக்கல ஆனா சேவும்மா கையுல கெடந்த  மூணு நெளி வளையான அறுத்துட்டு போனாங்க, இன்னக்கி மொத்தமா எல்லாரும் சேர்ந்து எம்புள்ள கலிமா வாழ்க்கய அறுத்துப்புட்டா . சேவும்மா வோட நம்பிக்கய அறுத்துப்புட்டா . மீதி நிக்குற ரெண்டு பொம்புள புள்ள எதிர்காலத்த அறுத்துப்புட்டா . வெளங்கி வெளங்கமாலும் திருக்கு திருக்குனு பாத்துட்டு நிக்குற எம்பேரப்புள்ள வாழ்க்கய அறுத்துப்புட்டா . மொத்ததுல தங்கச்சி குடும்பம் என் கழுத்தறுத்துட்டு போயிட்டாளே . எம்புள்ள கலிமாட்ட நான் என்ன சொல்லுவேன் ".

      காற்றில் சைக்கிளோடு ஆரீபு காக்காவின் கண்ணீரும் கலந்தது. எதிர்காற்று அவ்வப்போது சைக்கிளில் பிரயாணிக்கும் ஆரீபு காக்கா கண்களில் வழிந்த கண்ணீரை தன் பங்குக்கு சுழல் காற்றால் துடைத்துக்கொண்டிருந்தது. இயற்கைக்கு தெரிந்த மனிதாபிமானம் மனிதர்களுக்கு தெரிவதில்லை
      ஆரீபு காக்கா சைக்கிள் பள்ளியா குளத்தின் மேடையில் ஏறியது. வீடு நெருங்கியது உண்மை உடைக்கும் நேரமும் நெருங்கியதுரகசியங்களின் ஊமைத்தனம் பேச பயிற்ச்சி எடுத்துக்கொண்டது. ஒரு பெரிய அதிர்ச்சியை தாங்கி கொள்ளும் பக்குவத்தை  ஆரீபு காக்கா குடும்பத்திற்கு கால தருணங்கள்  கொடுக்க நினைத்தது. தன் கணவன் குறித்த சந்தோசக் கண்ணாடிகளை எல்லாம் கலிமா உடைக்கும் நேரம் நெருங்கியது. காலை விடிகையில் தனது கணவன்  சாவண்ணா இன்றாவது வந்துவிடுவான் என்ற நம்பிக்கையும் , மாலை நேரங்களில் அவனது இல்லாமை  குறித்த தற்காலிக  மெளனங்களுக்கும்  கவலைகளுக்கும் முடிவு தெரியும் தருணம் வந்ததுமாலை சாமங்களில் சாவண்ணா நினைவு எழும்போது தன் முகத்தில் வடியும் எண்ணை பசைகளை சோப்பு கொண்டு கழுவி விட்டு கண்ணாடியின் முன் நின்று அவனை நினைத்து புன்னகைக்கும் பழக்கம் இன்றோடு முடியும் தருவாயும் நெருங்கியது. மச்சான் சாவண்ணா குறித்த சில கேளிக்கை விளையாட்டுக்களை தன் அக்காவிடம் சிணுங்கும் ஆரீபாவும் கைஜம்மாவும் நிறுத்தும் தருணம் வந்தது.             
                                      

            ஆரீபு காக்கா சைக்கிள் விரைந்து சென்று கொண்டிருந்தது . தினமும் அவரை குறுக்கிடும் மீன்கொத்தி பறவை அன்றும்  குறுக்கிட்டது . ஆரீபு காக்கவிற்க்காக சில படிப்பினைகளை உணர்த்தும் ரகசியங்களை தான் அன்றைக்கு மீன் கொத்தி தனது வாயில் கவ்வி கொண்டு பறந்து சென்றது. பல முறை தான் கண்டிருக்கும் இந்த மீன்கொத்தி இன்று மட்டும் புதிதாய் தெரிந்தது ஆரீபு காக்கவிற்க்கு. மீன் கொத்தியின் புறப்பாடு ,சேருமிடம்,அதனின் செயல்கள் குறித்த தேடுதல் அவர் உள்ளத்தில் உதித்தது. அந்த தேடுதல் அவரது சைக்கிளை வீடு சேரும் முன்னே நிறுத்திவிட்டது.

   ஆரீபு காக்கா வின் தேடல் மீன்கொத்தியை தேடி சென்றது.
           
             (
தொடரும் )


No comments:

Post a Comment