"லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் " என்று பெருமூச்சு சங்கீதமாய் விட்டுக்கொண்டே சைக்கிளை கூட்டு கொட்டாய் முக்கத்தில் ஏற்றி மேட்டில் இறக்கிய போது சைக்கிளோடு தன் மனக்குறையும் இறக்கத்தில் ஒவ்வொன்றாய் இறக்கி கொண்டே வந்தார் ஆரீபு காக்கா.
"இன்னக்கியோட 20 வருசம் ஆச்சு கோட்டபட்டணம் வந்து. கொழும்புல என்னக்கி குண்டு போட ஆரம்பிச்சானோ அன்னக்கி நம்ம வாழ்க்கையிலயும் துண்டு உழுந்துருச்சு . சிலோன்ல நாரமலயுல உள்ள பலசரக்கு கடைய போட்டா போட்டபடி அன்னக்கி கிளம்பி வந்தது தான்".
மனம் சில நேரங்களில் நண்பனாக மாறிவிடுகிறது . தான் என்ன பேசினாலும் சில நேரங்களில் கூட தன் மனைவி சேவும்மா எதிர்த்து பேசுவாள் . ஆனால் மனம் ஒரு போதும் எதிரொலித்ததில்லை. எல்லா நேரங்களிலும் நாம் எடுக்கின்ற முடிவுகளுக்கு தலையாட்டுகின்ற மனைவியும் நண்பர்களும் கிடைப்பது அரிது. ஆனால் மனது எல்லா நேரத்திலும் உடன்பட்டு நமக்காக அதுவும் இசைந்து கொடுக்கிறது . எத்தனை சபைகளில் ஆரீபு காக்கா அடக்கி வைத்த வருத்தங்களை கொட்டி இருப்பார் அத்தனை சபைகளும் எதையாவது இலவசமாய் ஒன்றுக்கும் உதவாத ஆலோசனைகளை கொடுத்து அவரை நிராகரித்திருப்பதின் வலியை அடிக்கடி ஆரீபு காக்கா இப்படி சொல்வார். "ஓசணை தான்யா இந்தா ஒலகத்துல எல்லா பயலுவலும் தாராளமா அள்ளிக் கொடுக்குறது . காசு பணத்த கேட்டா துண்ட காணோம் துணிய காணோம்னு ஓடிருவாங்கே ".
ஆரீபு காக்கா தன் மனதை தான் குறைகளை கொட்டும் பாத்திரமாக வைத்துக் கொண்டார் விமர்சனங்களை விரும்பாத காக்கா.
ஊருக்கு வந்த நாள் முதல் ஆரிப் காக்காவுக்கு பொழப்பு தழப்பு எல்லாம் இந்த சைக்கிளில் தான் .
"சிலோனுக்கு அப்புறம் நமக்கு சைக்கிள்ல ஊரு ஊராய் போய் இந்த இடியப்ப ஒற மாவரிப்பட்டை விக்கிறது அப்புறம் இந்த ரஸூல் ஊதுபத்தி "
"கோட்டபட்டணத்துல உள்ள எல்லா பொண்டுவலுக்கும் ஆரீபு காக்கா இடியாப்ப ஒறனா ரொம்ப இஷ்டம் இடியாப்பம் அவ்ளோ நைசா இருக்கும் ஒன்னுக்கொன்னு ஒட்டாது. மாவரிப்பட்டைய வச்சு சளிச்சா கப்பி மாவும் பருமாவும் தானா பிரிஞ்சுரும் . மருமவனுங்க வெளிநாட்டுலேர்ந்து வந்தா அவங்கள கைக்குள்ள போடுறதுக்கு ஆரீபு காக்கா மாவரிப்பட்டயும் இடியப்ப ஒறயும் போதும். பொண்டுவலுக்கு. ஆசரா மாசம் வந்தா பாத்தியாவுக்கு பருமாவு வச்சு கொழக்காட்ட புடிப்பாவ. கப்பி மாவுல செஞ்ச இடியப்பத்துக்கும் கணவா ஆனமும் வச்சா மசங்காதா ஆளு ஊருல இருக்கா ".
சைக்கிள் மெல்லமாய் ராவுத்தரப்பா தர்கா நோக்கி நகர்ந்தது கூட அவரது நினைவும்.
பொதுவாக ஏழைகள் என்றால் அவர்கள் வலிகளை ஒப்புவிக்கும் போது பெரும் பேச்சு பேசும் தனவந்தன் கூட ஊமையாகி விடுகிறான். காசு பணங்கள் ஆட்டுவிக்கும் உலகத்தில் ஏழைகளின் உதவி கோரல்கள் பெரும் செல்வந்தர்களின் பேச்சுக்களையும் அவர்களின் கைகளின் தயாளத் தனத்தையும் முடக்கி போட்டுவிடுகிறது. யாது செய்வதென அறியாமல் கூழங்களை கொட்டி அதனை பொறுக்குவது போல் ஏழைகள் தங்களது கவலைகளை குப்பை கூழங்கள் போல் வழியெங்கும் கொட்டிவிட்டு காலார ஊர்ந்து அதனை பொறுக்குவது தான் உலக இயல்பு . சற்று வித்தியாசமாக ஆரீபு காக்கா, அவரது சைக்கிள் டயர் அவருடைய கவலைகளை காற்று அழுத்தி பாதையெங்கும் தேய்த்து கொண்டிருக்கிறது .
இது போன்ற கவலைகளை வழியெங்கும் கொட்டி பொறுக்கும் காலார ஊர்திகள் நிறைய கோட்டைப்பட்டிணத்தில் உண்டு.
ஆரீபு காக்காவுக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள் .
"மூத்தவ கலிமா இளையவ ஆரீபா நடுவுல உள்ளவ கைஜம்மா".
"கலிமா அவ உம்மாவுக்கு ஒத்தாசய இருப்பா. தங்கச்சி மவன் சாவண்ணாவ தான் அவளுக்கு கலியாணம் பண்ணி வந்தேன். வருசம் ஆறு ஆவுது. தங்கச்சி ஜொஹரா மவன் தான். மொத்தமா கக்கூலி 1 லச்சமும் பைக் காசு 50 ஆயிரமும் ரொக்கமா ஒன்ட்ரை வாங்கிட்டு தான் அவ ஊரு ஜமாத்த முடிவு பண்ணவுட்டா. இல்லனா மாப்புளய குதிரயுல ஏத்தமாட்டேன்னு கறாரா சொல்லிட்டா . சிலோன்ல நான் இருந்த அப்ப தங்கச்சி ஜொஹராவும் மச்சான் ஜமாலும் எவ்ளோ உதவிக்கு வந்தப்ப நான் என்னைக்கும் கறாரா இருந்ததில்ல. ஆனா கலியாண விஷயத்துல ரொம்ப கடுமயா நடந்துக்கிட்டாங்க ".
" கலியாணம் பண்ணதுலேர்ந்து விட்டக்கொற தொட்டக்கொற தான் என்னோட கூட பொறந்ததுக்கு . பாவம் கலிமாவோட வாழ்க்கை இருளடஞ்சு போச்சு . சரியா கலிமாவுக்கு ரஸூல் பொறந்ததும் ரெண்டாவது வருசம் சாவண்ணா மலசியாக்கு போனான். ரொட்டி போட பனக்குளத்து ஆளுங்க கிட்ட கலிமா வோட 10 பவுன சொசைட்டி பேங்ல அடகு வச்சு 2 லட்ச ரூவா தோட்ட பர்மிட் எடுத்து போனவன் தான். அதுக்கப்புறம் ஓசர வார்த்தைக்கி கூட ஒரு போனு பண்ணல . நோம்பு பெருநாளக்கி கிப்ஸ் வேட்டி மார்ட்டின் சட்டனு ஆஸரா ஹஜ் பெருநா னு ஒரு சீர் உடாம வாங்கிகிட்ட என்னோட பொறந்தவ சாவண்ணா போனதுக்கப்புறம் என்ன ஏதுனு கூட கேட்டதில்ல ".
" ஒருநா பள்ளியா கொள பொம்பள தொறைக்கு துணி தொவைக்க போன எம்புள்ள கலிமாவ நாக்குல விசம் வைச்சு ஜொஹரா பேசிப்புட்டா. பேச்ச கேட்டா கோவம் வராதவனுக்கு கோவம் வரும் . அந்த வெவரத்த பக்கத்து ஊட்டு மருயம்மா சொன்னதும் எம்புள்ள கலிமாவ என் ஊட்டுக்கே கொண்ணாந்துட்டேண் ".
போறப்ப நாக்க புடுங்குற மாதிரி சேவும்மா நாலு வார்த்தை கேட்டா ஜொஹராட்ட. "ஓடுகாலி உன் புள்ளயா? இல்ல என் புள்ளயா னு ?".
சாவண்ணா மலேசியா போய் இரண்டு வருடங்களுக்கு மேல் உருண்டு விட்டன. எத்தனை சுமைகளை சுமப்பது ஆரீபு காக்கவுக்கு . பத்து மாதப் பாரம் தான் கர்ப்பிணிகளுக்கு ஆனால் அதை காலம் முழுதும் சுமக்க வேண்டியது ஆரீபு காக்கா போல் எத்தனை தகப்பன் மார்கள்.
எத்தனையோ பொம்மைகளை பேரன் ரஸூலுக்கு ஆரீபு அப்பா வாங்கி கொடுத்தும் அவன் ஆசையாய் வாங்கி கேட்டது "எப்பப்பா சாவண்ணா வாப்பா வரும்" . நிராசாயாய் ஆரீபு காக்காவுக்கு நின்றது பேரன் ரஸூலின் கனவு.
கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே சைக்கிளை கிளப்பிக் கொண்டு ராவத்தரப்பா தர்கா வந்து சேர்ந்தார் . ரஹ்மத் கடை பாயிடம் வாங்கிய டீயை உறிஞ்சுக் கொண்டே மீண்டும்.
"மலேசியாவுல எத்தனையோ பேருகிட்ட சாவண்ணா பத்தி விசாரிச்சும் ஒரு தாக்கலும் இல்ல. ஒருநா நம்ம தாயபுள்ள வூட்டு முஜீபு போன் பண்ணி இருந்துச்சு . அப்ப தான் சாவண்ணா பத்தி அந்த சேதிய சொன்னுச்சு".
"அந்த தாக்கல கேட்டதுமே எனக்கு கிறுக்கு புடிச்சுருச்சு இந்த சேதிய நான் எப்படி எம் புள்ள கலீமாட்ட சொல்லுவேன் . அது வாயில்லா அப்புராணி".
ஏழைகள் என்றால் எத்தனை பாரங்கள் எத்தனை திசைகள் இருக்குமோ அத்தனை திசைகளில் இருந்தும் அத்தனை பிரச்சினைகள்.
"மனச தேத்திகிட்டு அன்னைக்கு வீட்டுக்கு போனேன். போறதுக்கு முன்னாடி பல ஒத்திக பாத்துகிட்டேன் ஒன்னுக்கு மூணு மொற "
(தொடரும்)
"மனச தேத்திகிட்டு அன்னைக்கு வீட்டுக்கு போனேன். போறதுக்கு முன்னாடி பல ஒத்திக பாத்துகிட்டேன் ஒன்னுக்கு மூணு மொற "
(தொடரும்)



No comments:
Post a Comment