குறிப்பு :பாத்திரங்களும் சம்பவங்களும் கற்பனைகளே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல .
"முஸ்தபா மாமாவும் அத்தாவும் ஒருவழியா கொழும்பு போய் சேந்துட்டாங்க.பின்னாடி அத்தாக்கு நாராமலயுல கடைனா முஸ்தபா மாமாவுக்கு திரிகோணமலயுல கடை ".
"முஸ்தபா மாமா என்னோட சின்ன வயசுல சிலோன்லேர்ந்து ஊருக்கு வந்து இறங்குறப்ப எல்லாரு கண்ணும் அவரு மேல தான் இருக்கும். மாமாவோட ஊட்டுக்காரவ சொவரா மாமி. அது சரியான சண்ட காமாட்சி ".
"ஊருல எல்லா பொண்டுவ கூடயும் போடாத சண்ட கெடயாது. காலயுல பால் ஊத்துற மஞ்சக்குடி அஞ்சல கிட்ட பாலுல தண்ணி கலந்ததுல சண்ட , பக்கத்துல இருக்குற மூக்கனா ஊடு ,மண்டயாட்டி ஊடு, எதுத்த ஊட்டு சைனம்பு வரைக்கும் அத்தன பேரோடயும் சாக்கட தண்ணி போற தூப்பாக்குழி சண்ட தான். அவுங்க ஊட்டு சாக்கட தண்ணி சொவரா மாமி ஊட்டு வாசல நனச்சு ஒரே மூத்தர வாடயாயிடும் ".
அப்புறம் மாமி இப்டி தான் சாக்கட சண்டய ஆரம்பிக்கும். "உன் ஊட்டு சாக்கடய உங்கூட்டு நடுதிண்ணயுல உட வேண்டியது தானடி " .
சண்ட உச்சகட்டமாச்சுனா மாமி ஆம்புள மாதிரியே ஆயுடும். காத கொடுத்து ஒரு வார்த்த கேக்க முடியாது .
"சொகரா மாமி ஊட்டு மேல சின்ன பய ஒருத்தன் கல்ல உட்டு ஓட்ட ஒடச்சதுல பதிலுக்கு பதிலு சொவரா மாமி அவனோட மண்டய உடச்சது ".
ஆனா மாமி சண்ட போடாத ஒரே ஆளு முஸ்தபா மாமா தான். மாமா மேல கொல்ல புரியம்.
"முஸ்தபா மாமா ஊருக்கு வந்த அடுத்த நாளு சுடுதண்ணிய மாமி சுடவச்சு கொடுக்கும். அதுல குளிச்சுட்டு மாமா சிலோன்லேர்ந்து கொண்டு வந்த புது மார்ட்டின் வெள்ள சட்டயுல குண்டூசிய கிழட்டிட்டு சட்டய மாட்டிக்குவாரு . குதிர மார்க்கு கைலிய சட சடனு இருக்கும்னு சொல்லி மாமி முன்னமே தண்ணில ஊர வச்சு காயவச்சுரும். மாமா குதுர கைலிய கட்டிக்கிட்டு சிலோன் பிராண்டு பச்ச பெல்டும் இடுப்புல கட்டிக்குவாரு. பாக்கெட்ல 10 ரூவா நோட்ட வச்சார்னா மார்ட்டின் சட்டயுல ரூவா நோட்டு கண்ணாடி மாரி தெரியும். அப்ப பத்து ரூவால கொல்ல சாமான் வாங்கலாம்".
"மாமா வாயுல எப்போதும் செய்யது பீடி எரிஞ்சுகிட்டே இருக்கும் . படுக்கயுல மட்டுந் தான் மாமாவும் பீடியும் தனி தனியா படுப்பாக. அவுகளுக்குள்ள அவ்ளோ ஒரு ஒரு சினேகம்".
"மாமா மார்க்கெட்ல மீனு வாங்க போற டிசைனே தனி. மல்லியப்பூ அத்தர் , மான் மார்க்கு கொட னு அசத்துவாரு. அவரு சிங்களத்துல மீன் வெலய சியாய் னும் பனஸ் ஹத்ராயுனும் கொடய வச்சு மீன ஏலத்துல கிண்டுவாரு . கையுல எடுத்தா நாறுமுல ? னு வியாக்கியானம் சொல்லுவாரு." .
"சொவரா மாமி மாமாவுக்கு அப்பப்ப முச்சந்தி மண்ண எடுத்து ஏழு மொளகா , கொஞ்சம் உப்பு வச்சு 11 தடவ பாத்தியா ஓதி கண்துஸ்டி கழிக்கும். அது மேல மாமாவ எச்சி துப்ப சொல்லும். அப்புடி துப்புணா எல்லா கண்ணும் ஓடிடும்னு சொல்லும். மேக்கொண்டு அவுக ஊட்டு முச்சந்தில அந்த மொளகா ,உப்ப பேப்பர்ல மடிச்சு நாலு கண்ணு வச்ச கொட்டாங்கச்சி வச்சி எரிச்சிவிடும். போற வர்றவக அந்த நெருப்ப பாத்தா கண்திஸ்டி போயிடும்னு மாமி சொன்னதா ஞாபகம்".
"மாமா ஊருக்கு வந்தாருனா ஊட்டுல மகுரிபு நேரம் ஆச்சுனா ஒரே எச்சி துப்புற சத்தமும் , முச்சந்தில நெருப்பு எரிச்சு உடுறதுதான் சொவரா மாமிக்கு வேல".
"அத்தன நாளா அன்னோன்யமா இருந்த மாமாவும் , மாமியும். அன்னக்கி சிங்களத்தானும் எல் டி டி இ காரணுவளும் அடிச்சுக்குற மாதிரி அடிச்சிக்கிட்டாக . மாமா அந்த சபுரு பயணம் வந்து இறங்குனப்ப தெருவே அல்லோல பட்டுகிரிச்சி. ஏன்னா மாமா அன்னக்கி கொழும்புலேர்ந்து எரக்குனது மொத்தம் அஞ்சு உருப்படி . மூணு உருப்படியலுவல்ல புள்ளவளுக்கு துணிமணினா . மீதி ரெண்ட கொழும்புலேர்ந்து புள்ளையளாவே இறக்கிவுட்டாரு . புரியலாயா ? மாமாவோட திரகோணமல குடும்பத்துல உள்ள ரெண்டு பொம்பள புள்ளகளா அந்த வருசம் கந்திரி கூடு பாக்க கூட்டிட்டு வந்தாரு. ".
"கோட்டபட்டணம் ராவுத்தர் அப்பா கூடுனா சுத்துவட்டு ஏரியால அத்துன பேமசு . கந்திரி பொற பொறந்துட்டா பத்தரு ஊட்டுல மணக்க மணக்க தேங்கா சோறு ஆக்கிடுவாக . நெல்லு காய போடுற பாய விரிச்சு அது மேல வெள்ள துப்பட்டி துண்ட விரிச்சு சோத்த கொட்டி விடுவாகா . சோறு ஒன்னுக்கொன்னு ஒட்டிக்காம இருக்க பாய் பூரா அத பெரிய ஆப்பய வச்சு கிளறிவிடுவாக. ராவுத்தரப்பா பள்ளியாசல்ல நிக்குற ஏழ பாழயல்களுக்கு பொங்குசு பைல போட்டு கொடுப்பாக ! சில வேரு பெரிய குட்டாண்ல வாங்கிட்டு போவாக ."
"மக்கே நாளு கொடியேத்தம். ராவுத்தரப்பா பள்ளியாச எதித்து தெக்க பாத்தாப்ல அவுக மூத்த மவன் தடிம்சாய்வ அப்பா அடங்கி இருக்காக. ரெண்டாவது மவன் நெய்னா மம்மது சாய்பு அவுக இங்கேருந்து இருவது மைலு தூரத்துல இருக்குற பாசிப்பட்டணத்துல அடங்கி இருக்காக .தடிம்சாய்வ அடக்கத்துக்கு கிழக்கால கடக்கர ஓரமா மூணு திண்டுகல்லு போட்ட மாதிரி உயரம் . அந்த திண்டுகல்லுல இரவத்தஞ்சு அடி உயரத்துல ஒரு கம்பு ஊண்டுவாக . அதுக்கு மேல இன்னொரு கம்ப இணைச்சுடுவாக. அம்மாம் பெரிய உயரக்கம்புல ஒரு ஆளு ஏறி அப்பாவோட கொடி ஏத்துவாக . "
"அதுக்கு மொத நாளு நடுத்தெருவுல கொடியேத்தம். ரெண்டு ஓங்குன மரத்த பதினஞ்சடி உயரத்துல கூட்டுக்கொட்டாய் முன்னாடி ஊண்டுவாக . அந்த மரத்த ஊண்டி நாலு பக்கமும் கவுத்த வச்ச கட்டி அழுத்தமா ஊண்டிடுவாங்க. அது பேரு கொடிமரம் . சந்தனக்கூடு செய்யுற எடம் பேரு தான் கூட்டுக்கொட்டாய் நடுத்தெருவுல இருக்கு . இங்க தான் ராவுத்தப்பா கூட்டுக்கு சப்பரம்,பொன்னிகொடம்லாம் செய்வாங்க. சந்தனக்கூட்டுல சப்பரம் ரெண்டு இருக்கும். சப்பரத்துல கலர் பேப்பர்,ஜிகுனா ஒட்டிய கண்ணாடிகள் இருக்கும். சப்பரத்துல குறுக்க நெடுக்க மூங்கி கம்பு வச்சு ஜன்னலு மாதரி சட்டம் செய்வாக. பனமரத்து பாலைய தண்ணில ஊற வச்சு சின்னசின்னமா கம்பு கட்டுற சாரம் மாதிரி அதுல ஈக்கி கிழிப்பாங்க. அந்த ஈக்கிய வச்சு இந்த கலரு கண்ணாடி எல்லாம் அந்த மூங்கி சட்டத்துல கட்டி வட்டமான அமப்பாக்கி கெணத்து உற மாதரி செய்வாங்க . அப்பொறம் சப்பரத்துக்கு மேல வரும் பொன்னி கொடம். அதுவும் கலரு கண்ணாடி டிசைன்ல பெரமிடு மாதரி இருக்கும் . சப்பரத்த ஒன்னுக்கு மேல ஒன்னா மாட்டு வண்டில அடுக்கி அதுக்கு மேல பொன்னி கொடம் வச்சா அதான் ராவுத்தரப்பா கூடு. இந்த சப்பரத்த மாடு கட்டுன கூட்டு வண்டில அடுக்குறதுக்கு தான் இந்த கொடிமரம். கொடிமரம் ரெண்டுக்கும் நடுவுல சப்பரத்த ஒண்ணு ஓண்ணா கயித்துல கட்டி கூட்டு வண்டிக்கு சாம்புவாங்க. ராவுத்தரப்பா கூட்டு சப்பரத்து குள்ள ரெண்டு ஆளுக நின்னுக்குட்டு பொன்னி கொடத்த கூடு போறப்ப சுத்தி வுடுவாக . பாக்கவே நல்லாருக்கும். கொடியேத்தம் அன்னக்கி போற அந்தக்கூடு பேரு ரதம்னு சொல்லுவாக . ரதம் போவயில அது மேல சனங்க மல்லியப்பு வீசுவாக. நாங்கூட ஒருதடம் கூடு செய்ற சேக்காதி அண்ணன்ட்ட கெஞ்சி கூத்தாடி ஒருதடம் ரதம் உள்ள போயுருக்கேன். சனங்க மல்லியப்பூவ கூட்ட நோக்கி வீசுனா அது சப்பரத்தோட கலரு கண்ணாடி ல வந்து தும்பி மாதரி ஒட்டிக்கும். நாங்க அந்த மல்லியப்பூவ எடுத்து சனங்க மேல திருப்பி வீசுவோம்".
" பொற பொறந்து பத்து பதிணஞ்சு நாளக்கி சிறுசுக,இளசுக ,பெருசுகனு கூட்டம் கூட்டமா கூட்டுக்கொட்டாய் க்கும் ராவுத்தரப்பா பள்ளியாசலுக்கும் நடயா நடக்கும். ராவுத்தப்பா பள்ளியாச எதுத்த மாதரி பெரிய தெடலு இருக்கும் அங்க இந்த பத்து பதுணஞ்சு நாளக்கிம் கடல கட ,பொரிகட ,முட்டாசு அலுவா கட, பொண்டுவ மட்டும் போற கண்ணாங்கட. கண்ணாங்கட யுல பொண்டுவலுக்கு உள்ள ரப்பர் ,ஏருபின்னு லேர்ந்து வாழக்காசட்டி ,மாவரிபட்ட ,இடியாப்பம் கொழக்கிற கம்புனு ஏராளமான சாமான் நெறஞ்சு கெடக்கும் . அது போவ ஒருவா ஊஞ்சா ,குதிர ஊஞ்சா ,புள்ளய ஆடுற வாத்து ஊஞ்சா னு ஒரு பக்கம் . இளசுக கத்திக்கிட்டே ஆடுறதுக்கு உசர ராட்டணம் ஒரு பக்கம். சர்க்கஸ் ஒரு பக்கம்னு அந்த திடலே நெறஞ்சு கிடக்கும் "
" அந்த திடலேர்ந்து கூட்டுக்கொட்டாய் வழிலே ஆட்டாம்பொட்ட . இந்த பொட்டல் தான் கூடு கொடியேத்தம் அன்னைக்கு பகல்லயும் ,கந்திரி அன்னக்கி விடிகாலயுலயும் நிக்கும் . கூடு நின்னா வாண வேடிக்க பாக்க சுத்துவட்டார சணம் எல்லாம் கூடிடும்.ராவுத்தரப்பா கூடு இந்த பத்து பதிணஞ்சு நாளுல ரெண்டே தடவ கூட்டு கொட்டாயிலேர்ந்து ராவுத்தரப்பா பள்ளியாசலுக்கு ஊர்ஓலமா போவும். ரதமா கொடியேத்தம் அன்னக்கி. அப்பொறம் ரதம் சந்தனகூடா லைட்டுலாம் கட்டி கந்திரி ராத்திரி அப்ப மாறிடும் . அது சந்தனகூடாயிடும் ".
"நம்மூரு பொண்டுவ இந்த பத்து பதிணஞ்சு நாளும் கஜினி மம்மது படை எடுக்குற மாத்ரி தெனமும் சனம் ராவுத்தரப்பா பள்ளியாசலுக்கு படையெடுக்கும் சாமான் வாங்க ".
"அன்னக்கி அப்புடி ஒரு சண்ட முஸ்தபா மாமவுக்கும் சொவரா மாமிக்கும் . மாமி மாமாவ ஒருமையுல திட்டி வீட்டு கதவ நாரங்கி போட்டுடாக ".
"மாமாவும் அந்த திருகோணமல குடும்பத்து ரெண்டு பொண்ணுங்களும் என்ன செய்வதுனு தெரியாம முழிச்சுட்டு நின்னாங்க ".
(தொடரும்)
(தொடரும்)










