Sunday, 22 February 2015

பொக்லைன் - சிறு(வர்) கதை

பொக்லைன் - சிறுகதை (ஆசிரியர்:அனிசா புதல்வன்)


விர் ...விர் ..விர் ..விர் .." என்று ஒரே சத்தம் ..விளையாட்டு பொக்லைன்கள் வட்டமாய் நின்று சத்தமிட்டு கொண்டிருந்தன தெருவில்  .சிறுவர்களின் ஆராவார சத்தமும் பெருகி பெரும் சத்தமாக ஓடி கொண்டிருந்தது .

"கொர் ..கொர் ..."என்று ஒரு சிறுவனின் வாய் மட்டும்  தனியாய் ஒரு சத்தம் அந்த சிறுவர்களின் சத்தங்களில் இருந்து புறக்கணிக்கப்பட்டு ஒலித்து கொண்டிருந்தது .

"டேய் அசீமு லூசு ...என்னடா கையை  பொக்லைன் மாதிரி வளச்சு வச்சுக்குறே .. வாயுல பொக்லைன் மாதிரி சவுண்டு விடுறே .. இது  எல்லாம் பொக்லைன் ஆயிடுமா..கெக்கே.. கெக்கே  "என்று சிரித்து அசீமிடம் ஒரு வாண்டு வம்பிழுத்து கொண்டிருந்தது .

                       


"டேய் உன்னோட நிஜ  பொக்லைன் கையை நினச்ச நேரம் நீட்டவும் முடியாது .நினச்ச நேரம் குறைக்கவும் முடியாது ..என்னோட கைய பாத்தீயா ..நீட்டிக்குவேன் ..குறைச்சுக்குவேன்...சுவர் மேல உன் பொக்லைன் ஏறுமாடா ..பாரு என் கைய சுவர் , குளம் , தண்ணி ,கடற்கரை ,பள்ளிகூடம் எல்லாத்துலயும் ஏறும் டா "என்று கேலி செய்த தன் நண்பனிற்க்கு பதில் சொல்லி விட்டு தன்னுடைய பொக்லைன் கையை வளைத்து
"கொர் ..கொர் .."என்று சப்தம் எழுப்பிக்கொண்டே தனது கை பொக்லைனை கிளப்பினான் .

அசீமுக்கும் நிஜ பொம்மை பொக்லைன் வாங்கி தன்னுடைய நண்ப சிறுவர்கள் போல் விளையாட வேண்டும் என்று ஆசை தான் . குடும்ப சூழ்நிலையும் வறுமையும் அவனுடைய ஆசைகளுக்கு தீனி போடவில்லை .தன்னுடைய மூன்று வயதிருக்கும்போது மீன் பிடிக்க சென்ற   அத்தா திரும்பவே இல்லை. வறுமையை சிறுவயதிலே உணர்ந்தவன் அசீம்.

மற்ற குழந்தைகள் பொக்லைன் வைத்து விளையாடும்போது அவன் மட்டும் தன்னுடைய கையை பொக்லைன் கைகளாக மாற்றி  மண்ணை தோண்டி குழி பறிப்பது ,கற்களை தூக்குவது என்று விளையாடி கொண்டிருப்பான் .

"அசீமு ..அசீமு ..அத்தா " என்றாள் ஆமீனா .
"உம்மா ..என்னம்மா "
"அசீமு உனக்கு முஜிபு மாமா  பொக்லைன் பொம்மை வாங்கி பார்சல் போட்டிருக்காம் "
ஒரே சந்தோசம் அசீமுக்கு . வெகு நேரம் கையை பார்த்து கொண்டிருந்தான் . தன் கையை பார்த்து புன்னகைத்தான்.
"எப்படி இருக்கும் அது.. அசார் வச்சிருக்கானே அது மாதிரி இருக்குமா ...அப்துல்லா வச்சிருக்கானே அது மாதிரி இருக்குமா ..அவனுங்க எல்லாம் ஊருல வாங்குனாங்க ..நம்மளுக்கு துபாய்லேர்ந்து வருது ..அது பெரிய பொக்லைனா தான் இருக்கும் " என்று பலவாறு நாளை வரப்போகும் பொக்லைன் பற்றி பலவாறு கனவுகள் கண்டுகொண்டிருந்தான். கைகளை தரைக்கு மேல் வைத்துகொண்டு தனக்கு வரப்போகும் பொக்லைனை வெற்றிடத்தில் கற்பனை செய்துகொண்டு ஆசைகளின் புழுதியை கிளப்பி கொண்டிருந்தது .

அன்றிரவு அவனது அம்மா ஆமீனா  அவன் கைகளை கண்டாள் பொக்லைன் போல் வளைத்து கொண்டே படித்திருந்தான் .மெல்லமாய் புன்னகைத்து அவனது தலையை வருடினாள் .

மறுநாள் காலை ...

"வீட்டுல யாரும்மா ..பார்சல் வந்திருக்கு " போஸ்ட்மேன் பிளிறிகொண்டிருந்தார்.
"இதோ வந்துட்டேன் "உள்ளிருந்து ஒரு குரல்..
"யாரும்மா இதுல ஆமினா "...
"நான் தான் "...
"இதுல ஒரு கையெழுத்து போடுமா "..

ஆமினா  பார்சலை பிரித்தாள். மிக அழகிய பொக்லைன் அசீம்  எதிர் பார்த்தது போல் பெரிய பொக்லைனும் கூட . சற்று முன்பக்கம் திருப்பினாள் பொக்லைன் வேறு ..பொக்லைன் கை வேறு என்று இரண்டாக  உடைந்திருந்து. பார்சல் முறையாக கையாளப்படாததால் அது உடைந்திருக்கலாம் .அவள் அதை கண்டதும் அதிர்ந்துவிட்டாள் . பொக்லைன் கைகள் உடைந்தது போல் அசீமின் ஆசைகளின் கைகளும் முறிந்து விட்டன .
அழுது கண்ணீர்விட்டாள் ஆமீனா .

"உம்மா..உம்மா ..அஸ்ஸலாமு அலைக்கும் "என்றான் அசீம் மதரசாவிலிருந்து திரும்பியவனாக ..
"ஏம்மா அழுகுறே "...
"ஒண்ணும் இல்லடா ..வெங்காயம் வெட்டுனேன் அதான் .." என்று கண்ணீர்துளிகளையும் உடைந்துப்போன பொக்லைன் பொம்மையையும் அசீமின் கண்களில் இருந்து மறைத்தாள் ஆமீனா .

"உம்மா....உம்மா .."
"சொல்லு..."
"மாமா அனுப்புன பார்சல் இன்னக்கி தான வரும் "
அழுகை ஆமீனாவிற்க்கு கண்களை பொத்துக்கொண்டு வெளியேறியது லாவகமாய் கண்ணீர் மொட்டுக்களை அடக்கியவாறு ..
"இன்சா அல்லாஹ் அது வரும் ஆனா  இன்னைக்கு அது வரல .."
"போம்மா எப்ப பார்த்தாலும் இத தான் நீ சொல்லுவே ..அத்தா எப்ப வரும்னு கேட்டாலும் இத தான் நீ சொல்லுவே ..."என்றான் கோபமாக .
"இல்ல அசீம் ..அத்தாவும் பொக்லைனும் சீக்கிரமே நம்மகிட்ட வந்துடுவாங்க "என்றாள்.

                 

அசீம் வேகமாய் "கொர் . .கொர்  .."என்று கிளம்பினான் தெருவை நோக்கி வழமையாய் கைகளை வளைத்து கை பொக்லைன் செய்தான் .அது சுவர்களில் பாய்ந்து காடு மேடுகளை தாண்டி பரந்தது.

அசீமின்  கை பொக்லைனின்  பலத்த சத்தமும்  ஆமீனாவின் கண்ணீரின் ஈரமும் ஒரு சேராய் இறைவனின் சன்னிதானங்களை அடைந்தன .

மறுநாள் காலை செய்திகள் இவ்வாறு ஓடியது "இலங்கையின் புதிய அரசு பதவியேற்றமையின் காரணத்தினாலும் ..இந்தியாவுடனான அதன் நல்லெண்ண உறவு மேலும் மேம்படும் பொருட்டு மூன்று ஆண்டுகளாய் இலங்கை சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும் தமிழகத்தை சேர்ந்த பத்து மீனவர்கள் விடுதலை "

ஆமினாவின் கண்களுக்கு அந்த செய்தி சந்தோசத்தை கொடுத்தன எனில் அந்த பத்து பேர் பட்டியலில் தன் கணவரின் பெயரையும் உறுதி செய்திருந்தார்கள் .

போன் ஒலித்தது மறுமுனையில் இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் அழைப்பு அது  "நாளைக்கு காலையில் உங்கள் கணவர்  திருச்சி ஏர்போர்ட் வந்திடுவார் . " என்று ஒரு செய்தியுடன் இணைப்பு துண்டிக்கப்பட்டது .

அசீமின் அத்தா இலங்கை விமான நிலையத்தில் அவனுக்காக ஒரு பொக்லைன் பொம்மையை வாங்கி பையுனுள் திணித்தார் ..

                   (முற்றும் )

Thursday, 5 February 2015

சிறுகதை சித்திரம் : ஆயிஷா - இரண்டு பக்கங்கள் (ஆசிரியர்:அனிசா புதல்வன் )

அறிமுக காட்சி :

         நாகூரிலிருந்து திருச்சி நோக்கி இரண்டு கார்கள் பாய்ந்துக் கொண்டிருந்தன. ஒன்றன்பின் ஒன்றாக வல்லம் வளைவு . வேகத்தினால் அதிர்ந்தது சாலையோரமாய் அருகிலிருந்த பள்ளிவாசலின்  கட்டியிருந்த ப்ளக்ஸ் போர்டு. ப்ளக்ஸ் போர்டில் இவ்வாறு எழுதியிருந்தது.

    "4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! -அல்குர்ஆன்"

                                                




ஆயிஷா -பக்கம் ஒன்று :

இடம்  - திருச்சி விமான நிலையம் , புறப்பாட்டு முனையம் .
ப்ளைட் நம்பர்  - SA1627.
பயண தேதி  - 20.10.2012
நேரம்  - இரவு 0930

         "சரியா பதினொரு மணிக்கு ப்ளைட் டிப்பார்ட் ஆயிடும் . 12க்கு கொழும்பு போயிடும் . மணி 1க்கு லண்டன் கனெக்சன் ப்ளைட் கொழும்பு ஏர்போர்ட்டுலேர்ந்து" வாப்பா மரைக்காயரிடம் நசீர் ஒப்பித்துக்கொண்டிருந்தான். ஆயிஷாவை  கல்யாணம் பண்ணி ஒரு மாதம் கழித்து கிளம்பும் முதல் பயணம்.

            ஆயிஷாவுடைய புர்காவின்  முகத்திரை தண்ணீரில் நனைக்காமலே கண்கள் கண்ணீரால் அதை  நனைத்துக் கொண்டிருந்தது நசீரின் பிரிவு பிரளயம் செய்து கொண்டிருந்தது . விமான நிலையத்தின் வண்ணவிளக்குகள் அவளுடைய மனதை லயிக்கவில்லை. விமான சப்தங்களும் பிரமாண்டமான வெளிச்சங்களும் கவலையை கூட்டி கொண்டே சென்றன.

              ஒரு வழியாய் அவளுக்கு ஆறுதல் கூறிவிட்டு இருவரின் பிணைந்த விரல்கள் ஒன்றுக்கொன்று விடைகூறிவிட்டு தூரமாய் நசீர் நகர்ந்து விமான நிலையத்தினுள் சென்றான். அவளுடைய வளையல்கள் அவனை போகவேண்டாம் என்று சத்தமிட்டு கொண்டிருந்தன . கண்ணாடி வழியாய் நசீரின் கைகள் ஆட்டும் போது அதன் மீது கண்ணீர் வழியும் கண்களை பொருத்தி அவன் கைகள் கண்ணீரை துடைக்காதா என்ற பரிதவிப்புடன் நின்றாள் ஆயிஷா.


ஆயிஷா -பக்கம் இரண்டு :

இடம் - திருச்சி விமான நிலையம் , வருகை வாயில் .
பயண தேதி  - 20.10.2012
நேரம் - இரவு 0930

      "உம்மம்மா(பாட்டி) சுல்தான் அப்பா(தாத்தா) பிளைட் SA1627 சரியா 10:45 மணிக்கு வந்துடும்னு அனவுன்சு பண்றாங்க " 15 வயதேயான ரிஸ்வான்  பால்முகத்தோடு ஆயிசம்மாவின் கைகளை இறுகப்பிடித்தான்.

        "சவுதிக்குனு போயி வருசம் ஏழு ஆச்சு . ஐந்து  மகளையும் கட்டி கொடுக்குறதுக்காக அங்கே தன்னோட  வாழ்க்கய கரச்சுட்டாரு. கபில்ட்ட(முதலாளி) சொல்லி இதோட முடிச்சுட்டு வரப்போறேனு சொன்னாங்க . ஊர்ல ரெண்டு மாசம் இருந்துட்டு கும்பகோணம் பக்கம் மளிகை கடை வச்சுக்க போறேன் " என்று சொன்னதும் நினைவுக்கு வந்து போனது .

        "கலியாணம் பண்ணிண புதுசுல ரெட்ட வட சங்கிலி வாங்கி கேட்டது. முப்பது வருசத்துக்கு அப்புறம் வாங்கிட்டு வர்ராங்க .மூணு நாளைக்கு முன்னாடி அவுக போன் பண்ணி ரெட்ட வட சங்கிலிய ஸ்கைபுல(skype) காமிச்சாங்க .  கண்ணுலே நிக்குது. இனிமேல்  ஓசியிலே நகை வாங்கி போட்டுட்டு விசேசத்துக்கு போகனும்னு அவசியம் இல்லை. அதை மர்யம்மாவிடம் பல் இளிச்சு வாங்குறதுக்கும் இனி தேவையில்லை ".

        மர்யம்மா இரவலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு தன் கணவர் சுல்தான் குறித்த எண்ணங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு நினைவு  திரும்பினார் ஆயிஷாம்மா.

திருப்புமுனை காட்சி:

மறுநாள் காலை ....

     ஆயிஷா வீட்டில் பலத்த  அழுகை சத்தமாக இருந்தது.    டீ.வியில் முக்கிய செய்தி ஓடி கொண்டிருந்தது .

"கொழும்பிலிருந்து லண்டன் சென்ற விமானம் அண்டார்க்டிக்கா பனிப்பாறையில் மோதி விபத்து ".

ஆயிஷம்மா வீட்டில் போன் ஒலித்தது மறுமுனையில் பேசிய  கொழும்பு விமான நிலைய அதிகாரி .

" ரியாத்திலிருந்து கொழும்பு வந்த விமானத்தில் பயணி சுல்தான் என்பவர் மாரடைப்பால் இறந்துவிட்டார் . அவர் உங்களது உறவினரா ?" என்று ஆயிஷம்மாவின் மூத்த மகளிடம் கேட்டார்.

                  இரண்டு குடும்பமும் சுருண்டு விழுந்தது .

இறுதி காட்சி :
  
           திருச்சியிலிருந்து நாகூர்  நோக்கி இரண்டு ஆம்புலன்சுகள் பாய்ந்துக் கொண்டிருந்தன. ஒன்றன்பின் ஒன்றாக வல்லம் வளைவு . வேகத்தினால் அதிர்ந்தது சாலையோரமாய் அருகிலிருந்த பள்ளிவாசலின்  கட்டியிருந்த ப்ளக்ஸ் போர்டு. ப்ளக்ஸ் போர்டில் இவ்வாறு எழுதியிருந்தது.

      4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! -அல்குர்ஆன் .

நாகூர் பள்ளிவாயில் காலை பத்து மணி  சுல்தானும் நசீரும் இறுதி ஜனாஸா தொழுகையில் வைக்கப்ட்டிருந்தனர்.

அங்கு நின்ற இரண்டு இளைஞர்கள் இப்படி பேசிகொண்டிருந்தனர் .

   "எப்படி பார்த்தாயா மரணம் இருவருக்கும் . ஒருத்தர் ஊர் போய் சேரவில்லை. இன்னொருவர் ஊர்வந்து சேரவில்லை ".

அருகில் அழுக்குப்படிந்த முதியவர் அவர்களை நோக்கி "ஏம்ப்பா உன்னோட மவுத்து உன் பின்னாடி நிக்குது. அதுக்கு நீ என்ன சேர்த்து வச்சுருக்கே? ".  

கோபமாய் முதியவரை நோக்கி
"போயா பைத்தியம் இப்புடி தான் நீ எதயாவது ஒளறிட்டு இருப்பே ".

மஃரிபு நேரம் அதே பள்ளிவாசல் கூட்டமாய் நின்றது .

"இன்னக்கி என்ன ஒரே மய்யத்தா விழுகுது . யாருப்பா மவுத்து ?".

   "காலையுல மைய்யத் அடக்கிட்டு போன ரெண்டு வயசுபசங்க பைக்ல போனப்ப ஆக்சிடென்டாம் ".
அங்கு இன்னொரு ஜோடி மீண்டும் தொடர்ந்தது . "பார்த்தாயா இந்த ரெண்டு பேருக்கும் மவுத்த ?"

அங்கே ஒரு குரல் ஒலித்தது .

"ஏம்ப்பா உன்னோட மவுத்து உன் பின்னாடி நிக்குது. அதுக்கு நீ என்ன சேர்த்து வச்சுருக்கே? ".
   
                   ( கதை  முற்றும். ஆனால் மரணங்கள் நீங்கள் எங்கிருந்த போதும் பின் தொடரும் .... )

நல்லடியார் -சிறுகதை (ஆசிரியர்:அனிசா புதல்வன் )

நல்லடியார் -சிறுகதை (ஆசிரியர்:அனிசா புதல்வன் )
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
      
டமாரென்று கோடாரி பலமாய் தலையில் அடித்ததில் உருக்குலைந்து விழுந்தேன் . கால்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறி கிடந்தன. உறுப்புகள் ஒன்றெடொன்றாய் இணைக்கமுடியாத அளவுக்கு  என்னுடல் சிதறி கிடந்தது.

      "அன்று இதுபோன்று ஒரு சிதைந்த நிலைமையில் விபத்தில் சிக்கிய  எங்கள் ஊர் ஜமாத் தலைவரின் உடலை பொறுக்கி எடுத்து வந்தனர் . வீட்டில் இறுதிசடங்கில்  அவரை சொந்த வீட்டு கட்டிலில் படுக்க வைத்திருந்தனர் ".

      "பள்ளிவாசலின் உட்புறத்தின் அறையில் ஒன்றில்  தான் நான் தங்கியிருந்தேன் . தினம் அல்லாஹூ அல்லாஹூ என்று ஓதி கொண்டே இருப்பேன். நல்லவர்களின் இறுதி சடங்கில் மட்டுமே கலந்து கொள்வது தான் என்னுடைய கொள்கை அத்தகைய நல்லடியார்களின் இறுதி சடங்கில் என்னை அழைத்து செல்லும்போது அழைத்துசெல்பவர்களுக்கு சுலபமாக இருக்கும்படியாய் என்னை மாற்றிகொள்வேன் . "

                         

     அன்று ஊர்தலைவரின் மரணம் குறி்த்து இருவர் என்னருகில் பேசி கொண்டிருந்தது என் நினைவில் வந்து போய் கொண்டிருந்தது .

    "நெஞ்சுல இரக்கமில்லா மனுசனோட மவுத்து(மரணம்) யாரும்  இரக்கப்படுற மாதிரி இருக்காது " என்றார் ஒருவர்.

       மற்றொருவரோ "மற்ற உயிர்கள் மீது இரக்கம் கொள்பவர் மீதே இறைவனின் இரக்கம் என்று முகம்மது நபி சொன்னது உனக்கு தெரியாதா ?" என்றார்.

        அப்போதிலிருந்தே  நாம் போக அருகதையற்ற இடமாக  முடிவானது தலைவரின் இறுதி யாத்திரை. அன்று தலைவரின் மகன் வலுக்கட்டாயமாக என் அறையிலிருந்து அழைத்து செல்ல முயன்றார். முடிந்தவரை என்னுடலை கணத்தால் பெருக்கிகோண்டேன் அறையை விட்டு என்னை கிளப்பமுடியாத அளவுக்கு.

       அவனுக்கு கோபம் பீறிட்டு என்னை எட்டி உதைத்தான் என் தலையில் இருந்த ஆணி குத்தி அவன் காலில் குத்தியது . இரத்தம் வழிந்தோடிய நிலையிலே அவனின் சபதம் நிறைவேறாமல் என்னை விட்டு  பிரிந்து சென்றான்.

        ஒரு வழியாக தலைவரின் நல்லடக்கம் முடிந்தது . புதிய தலைவராக  அவரது மகன் பதவியேற்ப்பு  வெள்ளி கிழமையான இன்று. பதவியேற்ற கையோடு கோடாரி சகிதமாக ஒருவரோடு வந்திறங்கினான் .

       " மய்யாத்தாங்கரை(இடுகாடு) கட்டில் இனி மய்யத்(இறந்தவரின் உடல் )வைக்க லாயக்கில்லை. அது காலெல்லாம் உளுத்து போச்சு . உடைச்சு கொண்டு போயி வீட்டுல போடுனு " என்று. சொல்லிக்கொண்டே என் தலையில் பலமாக கோடாரியால் தாக்கினான். ஒவ்வொன்றாய் என்னை கோடாரி கொண்டு சிதறடித்தான். கட்டில் அழுதுகொண்டே உயிரிழந்தது . அதன் திக்ரு பெரும் ரணமாய் வெளிப்பட்டது . சதா காலம் இறைவனை புகழ்ந்து கொண்டிருந்த உயிர் விடை பெற்றது.

அன்று பள்ளிவாசல் வெள்ளிகிழமை பிரசங்கமாக  ஒலிக்கிறது .

"யுக இறுதி நாள் ஏற்ப்படகூடிய  அடையாளங்களில் ஒன்று. அவனை சதா காலம் புகழ்ந்து கொண்டிருக்கும்  நல்லடியார்களை உலகம் இழந்து கொண்டு வருவது ".

Monday, 2 February 2015

ஆரீபு காக்காவும் ரஸூல் ஊதுபத்தியும் - தொடர்கதை -4


                                      

          "யாரும் செய்யாத ஒண்ண  முஸ்தபா மாமா செஞ்சுப்புட்டாருனு ஊரு பூரா பேச்சு. மாமா கோவப்பட்டதில்லை அன்னைக்கு கோவப்பட்டு நின்னத பாத்து ஊரு திருவிழாவுல  சாமி ரெண்டு ஆடுற மாதிரி தோணுச்சு ".
   தொறந்துவுட்ட எரளிவய கம்மா தண்ணி மாத்ரி மாமா ஆரம்பிச்சாரு சாத்துன கதவு முன்னாடிமாமி கதவுக்கு பின்னாடி நின்னு கேட்டுட்டு இருந்துச்சு.
"அவன் அவன் என்னென்னமோ ஊருல  பண்றாண். நான் ஹலாலா ரெண்டாம் கலியாணம் பண்ணுனது தப்பா ? நான் பண்ணுனது தப்புனா அவனுங்க செஞ்ச பாவத்துக்கு  என்ன பேரு சொல்லுவே ".
" கட்டிக்கிட்ட மாப்புள ஹராம பண்ணிட்டு  வந்து நிக்கலனு சந்தோசப்படுறீயா அத விட்டுட்டு ? ."

    "நீயே சொல்லு அஞ்சு வவுத்து தொழுவயுல  ஒண்ண விட்டுருக்கேனா, இல்ல கள்ளு கட சாரயம் ஒரு வா குடிச்சிருப்பேனா, இல்ல நான் எங்கயாவது பல்ல காட்டிட்டு நின்னுருப்பேனா . ஒனக்கு என்ன கொற வச்சுருக்கேன் ?".

     "ஒங்களுக்குலாம் ஊருல இருக்கிறவங்க மாத்ரி அல்லாவுக்கும் ரசுலுக்கும் மாத்தமா நடக்ற ஆளுங்கள தான  புடிக்கும் ? ஹராமா எப்டி வேணும்னாலும் இருந்துக்கோ  ஆனா ஹலாலா ஒரு கலியாணம் பண்ணிட்டு வந்து நின்னுறாதே ? இதான ஒங்களுக்கு வேணும் ".    

   "ஒன்னுக்கு ரெண்டா கட்டி அதுல ஒன்னுல கொற வச்சா எங்கண்ணுல அல்லா குத்தமாட்டானா ? சொவரம்மா ஒங்கண்ண மறைக்கனும்முனா நான் இதுகள கூட்டிட்டு வந்துருப்பேனா ? உன்னட்டேர்ந்து நான் மறச்சுடலாம் . ஆனா அல்லாவோட பார்வயுல  மறஞ்சு போற தெறம ஒனக்கு இருக்கா ? எனக்கிருக்கா ? ஒலகத்துல யாருக்கு இருக்கு ."

         " இப்பகூட ஒனக்கு நான் பயப்புடல . ஆனா அல்லாவுக்கு பயந்து தான் இங்க நிக்கிறேன். அனாதய ஆலமரத்துல நின்ன கொடிக்கொளத்து மாட்ட ஊட்டுல வச்சுருந்தே . அதுக்கு அடிபட்டு நின்னப்ப மருந்துபோட்டே. மூணு நாளு கழிச்சு கோனாரு மாட்ட தேடி வந்தப்ப அந்த மாடு கோனரா தேடல. உன்ன தேடி பல நாளு கொடிக்கொளத்துலேர்ந்து வந்து வாசல்ல நின்னது  ".
"இன்னக்கி இந்த ரெண்டு புள்ளயுலும் உம்மாவ இழந்துப்புட்டு கொடிக்கொளத்து மாடு கணக்கா உன்னோட ஊட்டு வாசல்ல வந்து  நிக்குது".

       " ஆமா இன்னக்கி எம்புள்ள இதுரெண்டும் தாய இழந்து நிக்குது . அவ பொல்லா நோயுல போயி சேந்தா . புள்ளய முன்ன போனா உம்மா வாப்பவுக்கு சொர்கத்துல துவா செய்யுஞ் சொல்லுவாங்க . இன்னக்கி உம்மா முன்னுக்க  போயி  இந்த  புள்ளைங்களுக்கு  சொர்க்கத்துல துவா செய்யுது ".

      "அல்லா ஒலகத்துல ஒன்னுக்கொண்ணு ஒதவுற அமைப்ப வச்சுருக்கான்.மேடு பள்ளம்னு வாழ்க்கையுல வச்சுருக்கான்சரிசமாம அவன் வைக்காம உட்டதுக்கு ஒரு காரணம் இருக்கு சொவரம்மா . மனுசப்பயல் ஒருத்தொருக்கொருத்தன் ஒதவனும்னு தான் அவன் அப்புடி வச்சுருக்கான். ஆனா மனுசப்பயல் கெடச்ச வரைக்கும் சுருட்டுறான். சுருட்டுறவனோட கபுரு சும்மா சுருண்டு கெடக்குது . எத்தன சீமான பாத்துட்டேன் அத்துன சீமானும் ஈமானோட போனான்னு யாருக்கும்  தெரியல . "

              "ரொம்ப சத்தமா பேசுனவங்க எல்லாம் மய்யத்தாங்கொல்ல போயி  மவுனாமாயிடுறான். அந்த மவுனத்தோட பாசை கபுருல போய் கேட்டவன் எங்கயும் சத்தமா பேசமாட்டான். ஊருக்கு ஊரு போனா கட்டு சோத்த கட்டுற சொவரம்மா அல்லாவோட ஊருக்கு நாம போவ ரொம்ப நேரமில்ல. இந்த அனாத புள்ளயள ஒன்னோட  நெஞ்சோட அணச்சுக்க ,ஓன்னோட  மடியுல அதுகள படுக்கபோட்டு அதுக தலய பாசமா வருடிவுட்டா அதுக தலயுல எவ்ளோ முடியிருக்கோ அவ்ளோ ஒம்பாவம் கொட்டிபோவும் . போற எடத்துக்கு புண்ணியத்த கட்டிசோத்தா  கட்டிக்கோ ".

       பூட்டிய கதவு மெல்லமாய் திறந்தது . கடினமான மனக்கதவுகள்  துருப்பிடித்து திறக்கமுடியா நிலையில் உள்ளதுகருணை எண்ணைகளை கதவிடிக்கினில் ஓரமாய் ஊற்ற வேண்டியுள்ளது. இன்று கதவுகள் மெல்லமாய் சிரித்துக்கொண்டு திறக்கிறது . கருணையும் அன்பும் சாவிகளாய மாறி பல பூட்டுக்களை திறக்கிறது. மனித மனம் பல ரகசியங்களை அடைத்துப் பூட்டபட்ட கோட்டைகள். சில மனித உள்ளங்கள் பூட்டப்பட்டு அச்சாவிகள் சாக்கடையில் எறியப்படுகின்றன மீண்டும் அது திறந்திடா வகையில். சில சாவிகள் தான் மனிதநேய ஆணிகளில் கொழுவப்படுகின்றன . அதை திறப்பது அன்பு வழிந்தோடும் இது போன்ற தருணங்களில் தான்

   சொவரம்மா மாமி திறந்து ஒரு வார்த்தை தான் முஸ்தபா மாமாவிடம் இப்படி சொன்னாள்.
"கதவ தொறந்தது ஒனக்காக இல்லைய்யா . இந்த ஒண்ணு மண்ணு தெரியா பச்சபுள்ளவளுக்கு தான். நீ வாம்மா தாயி " என்று குழந்தைகளை அழைத்துப்போனாள்.

      ஒரு கதவு திறந்து மறு கதவு திறப்புக்கும் அடைப்புக்கும் இடைப்பட்ட நிலையில் வீடு புகுந்தார் முஸ்தபா மாமா . நம்பிக்கையுடன் உள்ளே நடந்தார் அதுவும் திறந்துவிடும் என்று .
மாமா வின் நினைவுகளில் இருந்து திரும்பினார் ஆரீபு காக்கா  . மதிய சாப்பாட்டு அழைப்பை வயிறு விடாமல் எழுப்பிக் கொண்டிருந்தது . சைக்கிளை வேகமாய் இழுத்து சென்றது வயிற்றின் அழைப்பு .

     காற்று சற்று வேகமாய் அடித்துக்கொண்டிருக்கும் வேளையில் காற்றை எதிர்த்து நடைபோட்டுக் கொண்டே  ஆரீபு காக்காவின் சைக்கிள் வீட்டை நெருங்கியது .
    வாசலில் பேரன் ரஸூல் விளையாடி கொண்டிருந்தான். ஆரீபு காக்கவிடம் ஓடிவந்து "ஆரிபப்பா முட்டாய் தாப்பா " என்றான் .

      ஜூப்பாவில் ஒட்டிக் கொண்டு பிசுபிசுத்த இரண்டு மிட்டாய்களை நீட்டினார். "இ்ந்தாத்தா ரசூலு " . கழுகு தரையில் நிற்க்கும்  கோழி குஞ்சுகளை துழாவி செல்லுவது போல் ரசூலின் கைகள் அதை பறித்து சென்றன

   கேள்வி குறியாக நின்ற கலிமா ,நினைவில் நிற்க்கும் சாவண்ணா , எந்த ஓர் பாவம் அறியா ரஸூல் என்று மனம் முழுவதும் கவலைகளை நிரப்பிக்கொண்டு தன் கவலையில் கண்ணீர் கலங்க. அல்லாஹ்விடம் இப்படி பிரார்த்தித்தார் ஆரீபு காக்கா .
              

    "யா அல்லா ரப்பே இந்த பச்சபுள்ள ரசூலு மொகத்துக்காகவது அந்த சாவண்ணா பயல ஊருக்கு கொண்டாந்துரு ".

      கண்ணீரின் இரண்டு சொட்டுக்கள்  கலிமா ஆரீபு காக்காவிற்க்காக கொண்டு வைத்த செம்புத்தண்ணீரில் கலந்தது. எப்போதும் தேன் அமுதமாய் தித்திக்கும் தாமரைக்குளத்து தண்ணீர் அன்றைக்கு மட்டும் ஆரீபு காக்காவிற்க்கு உப்பு கரித்தது .

     வழமையாய் தன் பிரிய மகள்களுக்காகவும் நேசத்துக்கு பாந்திரமான பேரனுக்கும் ஏற்க்கனவே வாங்கி வைத்திருந்த கோனார் கடை போண்டாவை கலிமாவின் கைகளில் திணித்தார் .

  "இந்தம்மா கலிமா தங்கச்சியளுக்கும் ரசூலுக்கும் ஒன்னோட  அம்மாவுக்கும் கொடும்மா ".

       கலிமா தன்னை விட்டும் நகரும் வரை சந்தோசமாக தன்னை கலிமாவிடம் காட்டிக் கொண்ட ஆரீபு காக்கா வேகமாக சதா காலமும் அழுது கொண்டிருக்கும் மனதின் அழுக்கோலத்தை முகத்தில் கொண்டுவர கண்களில் நீர் கொப்பளித்து வழிந்தோடியது . இது போன்ற ஒரு நாளில் தான் சாவண்ணா மலேசியாவில் ஒரு மலாய்காரியின் பிடியில் சிக்கிய விடயத்தை கலிமாவிடம்  கூற முயன்றார்.

           "அன்னைக்கி தேங்கா மூடி காஜரா ட்ட வியாவரத்த முடிச்சுட்டு  கலிமாட்ட எல்லாத்தயும் சொல்லிடலாம்னு முடிவு பண்ணி தான் சைக்கிள எடுத்துட்டு வந்தேன். தாங்க முடியா சோகம் . எதிர்காத்து அன்னைக்கி என்ன சைக்கிள்ள தள்ளுறதுக்கு பதிலா என்னோட மனகஷ்டம் தள்ளிட்டு இருந்துச்சு . ஒவ்வொருத்தனும் பொண்ணு நல்லா வாழனும்னு தான் கலியாணம் பண்ணி கொடுக்குறாங்க. ஆனா தின்ன சோறு செரிக்கிறதுக்கு முன்னாடி கழுத்தறுக்குற மாதிரி உட்டுட்டு ஓடி போறாங்கே . இவனுங்களுக்கு எதுக்கு கலியாணம். பொண்டாட்டி புள்ளயள காப்பாத்த தெரியாதவன் என்ன ஆம்புள . எந்த மொதல் போட்டும் அந்த நஷ்டத்த சரி கட்டலாம். பொம்புள புள்ளயளுவள கட்டி கொடுத்து வர்ர  நஷ்டம் இந்த சாவண்ணா மாதிரி ஆளுங்களால வந்தா அந்த நஷ்டம் பெரும் நஷ்டம் . ஒரு காலமும் அத திருப்ப முடியாது. பொம்புள புள்ள பெத்தா அதோட சேத்து கொஞ்சம் பொறுமய பெத்துக்கனும் திட்டுனா ரோசபடாத அளவுக்கு சொரண இல்லாம இருக்கவும் கத்துக்கனும்கலியாணம் பண்ணுணப்ப ஜமாலும் என் தங்கச்சி ஜொஹராவும் என்ன ஒரு வழி பண்ணிட்டாங்க. கலியாணம் பண்ணுனா சொகத்த மட்டும் தான்  இவனுங்க ஏத்துக்குறாங்க ஆனா சுமைய  நம்ம தலயுல கட்டுறாங்கே . "

            "தலப்புள்ள கலியாணமே இப்புடியா போச்சு . இன்னும் என்னோட ரெண்டு கொமரு ஊட்டுல நிக்குது . கலிமாவோட  கலியாணத்த பல அறுப்புக்கு மத்தியுல தான் நான் நடத்துனர். சேவும்மாவோட காத அருக்கல ஆனா  சேவும்மா காதுல கெடந்த கம்மல அறுத்துட்டு போயிட்டாங்க, கைய அறுக்கல ஆனா சேவும்மா கையுல கெடந்த  மூணு நெளி வளையான அறுத்துட்டு போனாங்க, இன்னக்கி மொத்தமா எல்லாரும் சேர்ந்து எம்புள்ள கலிமா வாழ்க்கய அறுத்துப்புட்டா . சேவும்மா வோட நம்பிக்கய அறுத்துப்புட்டா . மீதி நிக்குற ரெண்டு பொம்புள புள்ள எதிர்காலத்த அறுத்துப்புட்டா . வெளங்கி வெளங்கமாலும் திருக்கு திருக்குனு பாத்துட்டு நிக்குற எம்பேரப்புள்ள வாழ்க்கய அறுத்துப்புட்டா . மொத்ததுல தங்கச்சி குடும்பம் என் கழுத்தறுத்துட்டு போயிட்டாளே . எம்புள்ள கலிமாட்ட நான் என்ன சொல்லுவேன் ".

      காற்றில் சைக்கிளோடு ஆரீபு காக்காவின் கண்ணீரும் கலந்தது. எதிர்காற்று அவ்வப்போது சைக்கிளில் பிரயாணிக்கும் ஆரீபு காக்கா கண்களில் வழிந்த கண்ணீரை தன் பங்குக்கு சுழல் காற்றால் துடைத்துக்கொண்டிருந்தது. இயற்கைக்கு தெரிந்த மனிதாபிமானம் மனிதர்களுக்கு தெரிவதில்லை
      ஆரீபு காக்கா சைக்கிள் பள்ளியா குளத்தின் மேடையில் ஏறியது. வீடு நெருங்கியது உண்மை உடைக்கும் நேரமும் நெருங்கியதுரகசியங்களின் ஊமைத்தனம் பேச பயிற்ச்சி எடுத்துக்கொண்டது. ஒரு பெரிய அதிர்ச்சியை தாங்கி கொள்ளும் பக்குவத்தை  ஆரீபு காக்கா குடும்பத்திற்கு கால தருணங்கள்  கொடுக்க நினைத்தது. தன் கணவன் குறித்த சந்தோசக் கண்ணாடிகளை எல்லாம் கலிமா உடைக்கும் நேரம் நெருங்கியது. காலை விடிகையில் தனது கணவன்  சாவண்ணா இன்றாவது வந்துவிடுவான் என்ற நம்பிக்கையும் , மாலை நேரங்களில் அவனது இல்லாமை  குறித்த தற்காலிக  மெளனங்களுக்கும்  கவலைகளுக்கும் முடிவு தெரியும் தருணம் வந்ததுமாலை சாமங்களில் சாவண்ணா நினைவு எழும்போது தன் முகத்தில் வடியும் எண்ணை பசைகளை சோப்பு கொண்டு கழுவி விட்டு கண்ணாடியின் முன் நின்று அவனை நினைத்து புன்னகைக்கும் பழக்கம் இன்றோடு முடியும் தருவாயும் நெருங்கியது. மச்சான் சாவண்ணா குறித்த சில கேளிக்கை விளையாட்டுக்களை தன் அக்காவிடம் சிணுங்கும் ஆரீபாவும் கைஜம்மாவும் நிறுத்தும் தருணம் வந்தது.             
                                      

            ஆரீபு காக்கா சைக்கிள் விரைந்து சென்று கொண்டிருந்தது . தினமும் அவரை குறுக்கிடும் மீன்கொத்தி பறவை அன்றும்  குறுக்கிட்டது . ஆரீபு காக்கவிற்க்காக சில படிப்பினைகளை உணர்த்தும் ரகசியங்களை தான் அன்றைக்கு மீன் கொத்தி தனது வாயில் கவ்வி கொண்டு பறந்து சென்றது. பல முறை தான் கண்டிருக்கும் இந்த மீன்கொத்தி இன்று மட்டும் புதிதாய் தெரிந்தது ஆரீபு காக்கவிற்க்கு. மீன் கொத்தியின் புறப்பாடு ,சேருமிடம்,அதனின் செயல்கள் குறித்த தேடுதல் அவர் உள்ளத்தில் உதித்தது. அந்த தேடுதல் அவரது சைக்கிளை வீடு சேரும் முன்னே நிறுத்திவிட்டது.

   ஆரீபு காக்கா வின் தேடல் மீன்கொத்தியை தேடி சென்றது.
           
             (
தொடரும் )