சற்று பரபரப்புடன் இது போன்ற ஒரு தருணத்தில் தான் கலிமாவிடம் நடந்ததை கூற முற்பட்டார். அன்றைக்கு இக்பால் தெருவில் தான் வியாபாரம்.
" தேங்கா மூடி வூட்டு காஜரா ரெண்டு இடியாப்ப தட்டும் நாலு ஓலை குட்டானும் வாங்குனாக "
ஊதுபத்தி, மாவரிபட்டை இடியாப்ப தட்டு, உறை ஆரீபு காக்காவோட கைவரிசை என்றால் பனை ஓலை குட்டான் ,தட்டுகள சேவும்மாவோட கைவரிசை .
ஆரீபு காக்கா விடம் வியாபாரம் செய்யும் பொருட்களுக்கு பெண்கள் கேட்க்கும் விலை பேரத்தில் கட்டுபடியாகமல் இப்படி சொல்லுவார்.
" சேவும்மா பொட்டி மொடயுற அழகே தனி தான் அது மேல எவ்ளோ காசு வந்தாலும் ஈடாவாது தாயீ ! பனை ஓலய கூணா மீனா தோப்புல காலயுல போய் பொறக்கி வந்து அத அருவா வச்சு சீச்சடுவா. பொறவு பச்சை கலரு , ரோசு கலரு னு சாயத்த சத்தரத்துல வாங்கிட்டு வந்து அந்த பன ஓலய அதுல நனச்சு போட்டு ஊரும்".
"மறுநா காலயுல அத வெயில்ல நெல்லு காய போடுற பாயுல நெல்லோட சாய ஓலையும் சேர்ந்தாப்ல காயும். காஞ்ச பொறவு அத சட்டுவா கத்தி வச்சு கிளிச்சா ஈக்கி தனியா கீத்து தானா பிரிஞ்சிடும். ஈக்கிய ஓரத்துக்கும் கீத்த அடுத்தடுத்தாப்ல ஒவ்வொரு கலரும் வர்ர மாதிரி. குட்டானயும் தட்டயும் மொடஞ்சிடும் சேவும்மா. அந்தா குட்டான் ஒவ்வொன்னும் பத்து மரக்கா நெல்லு தாங்கும். அவ்ளோ வலு. காச பாக்க வேணாம் காஜரா ! அவ்ளோ ஜோரான குட்டான். "
"காசு குட்டானுக்கு இல்ல தாயி ! காலயுலே இத வித்து நாலு காசு பாக்கணும் னு நெனச்சு சுத்துறோம். உச்சுருமுற நேரத்துல காடு கண்ணி னு சேவும்மா சுத்துறா. அவ சுத்தி அடுப்பு எரியுற துக்கு நாலு சுள்ளி வெறவும் , இந்த பன ஓலயும் பொறக்குவா.அத நேரம் காலம் பாக்காமா காலயுல நீச்சி தண்ணி குடிச்சுட்டு ஊரு பூரா அலஞ்சு விக்குறேன் . அலச்சலுக்கு தான் அஞ்சு ரூவா சேத்து கேக்குறேன். " சொல்லி முடித்தார் ஆரீபு காக்கா.
தேங்கா மூடி காஜரா மனிபர்சுலேர்ந்து அவுக கேட்ட வெலயும் குறச்சு கேட்ட அஞ்சயும் சேத்து மொத்தமா கொடுத்துட்டு தன் ஊட்டுக்கு நடைய கட்டுனா.
சில நேரங்களில் மனிதன் சமூகத்திடம் பேசும் போது உண்மை நிலையை மறைத்துக் கொள்ள சில ஒப்பனைகளை கையாள்கிறான். வியாபார புன்னகை, அடுத்தவனை கவிழ்த்தும் விஷம புன்னகை, தன் கஷ்டத்தை மறைக்கும் சகிப்பு புன்னகை என்று நிறைய ஒப்பனைகள் மனிதனுக்கு தேவைப்படுகிறது.எப்படி எனில் பருவகுமரிகள் தன்னை பெண் பார்க்க வருகிறார்கள் என்று அறிந்தவுடன் தன் முகப்பருக்களையும் கருவளையங்களையும் மறைத்து ஒப்பனை செய்யும் விதம் போல். உண்மை நிலை உலகம் கண்டால் அதனை ஏற்றுக் கொள்ளும் தைரியம் அதற்க்கு இல்லை. அனைத்துக்கும் பொய்முலாம் பூசியதால் தான் உலகம் எதார்தத்தை இழந்து நிற்கிறது. அது எதார்த்த மனிதர்களையும் விட்டு வைக்க வில்லை முகச்சாயத்தை பூசி விடுகிறது .
ஆரீபு காக்கவும் அது போன்ற ஒரு முகபாவனையை தான் மையாக தன் முகத்தில் பூசியுள்ளார். அது யாரையும் கவிழ்த்துவதற்க்காக போட்ட ஒப்பனை அல்ல. சில குட்டான்களையும் ஊதுபத்திகளையும் மாவரிப்பட்டைகளையும் விற்பதற்க்காக தந்திரமாய் சிரித்து தன் கவலையை மறைத்து வாங்க வரும் பெண்களிடம் தன் புன்னகை உதிர்க்கும் இன்முக ஒப்பனைக்கு சொந்தக்காரர் ஆரீபு காக்கா.
தன் நினைவுகளில் இருந்து மீண்டவாறு ராவுத்தரப்பா பள்ளிவாசலில் தன் துண்டை விரித்து படுத்த வாறு பழைய பொழுதுகளில் மீண்டும் தன் சைக்கிளோடு பயணிக்கிறார்.
"அன்னக்கி தேங்காமூடி ஊட்டு காஜராக்கு குட்டான வித்துட்டு சைக்கிள கிளப்புனேன் "
"அல்லாவு அக்பரு " என்று மதிய வேளை தொழுகைக்கு அழைப்பு .
" சின்ன பள்ளியாச அன்சாரப்பா மைக்ல பாங்கு சொன்னா மைக்கே தேவயில்ல. அவருக்கு மக்காவுல பாங்கு சொல்றதா நினச்சு தனக்கு வந்த அத்தன ராகத்துலயும் கத்திக்கிட்டே இருந்தாரு . அவரு கத்தி கத்தியே அவரோட வெங்கல குரல எங்கட ஜனங்களுக்கு பழவிபோச்சு."
"சில நேரத்துல மைக்ல அன்சாரப்பா ஒலறியும் கொட்டுவாரு . அத்தா இறந்தா மவுத்து செய்திய அன்னரோட மவன் மவுத்தாயிட்டாருனு கொழப்பி அடிப்பாரு . EB ல லைட் பில்லு கட்டுற செய்திக்கு பதிலா தாயுமார்கள் அனைவரும் ஆஸ்பத்திரிக்கி போய் பில்ல கட்டுங்க னு பொண்டுவ மூளய கலங்க மலங்கடிப்பாரு . எதயும் மைக்ல கொளப்பி விட்டு அனவ்ன்ஸ் பண்றது தான் அன்சாரப்பா வாடிக்கை " .
அபஸ்வரங்களை பழகி கொண்டால் அதுவே பிற்காலத்தில் அதல்லாத ஒரு வாழ்க்கையை நினைத்துப் பார்க்க இயலாது. அது போல தான் அன்சாரப்பா பற்றியும் ஆரீபு காக்காவுக்கு தோன்றியது.
"ஒடம்புக்கு சொகவீனம்னு ஒரு தடவ அன்சாரப்பா அவ்களோட மக வீடு இருக்குற அம்மாடம் போய் அஞ்சு நாளாச்சு. அவுகளுக்கு பதிலா சுருட்டப்பா தான் சின்னபள்ளியாச ல்ல மொய்சாப்பா. இனி அவரு சொல்றது தான் சின்ன பள்ளியாசல்ல பாங்கு போங்குலாம். மொத மொதல்ல அவரு பாங்கு சொல்ல போனா அல்லாவு அக்பருனு சொல்ல வாயே வரல. பாவம் வராமா மைக் முன்னாடி முழிச்சுட்டு இருந்தாரு. துண்டு சீட்டுல எழுதிக் கொடுத்த அப்பொறம் ஒரு வழியா சுருட்டப்பா அரங்கேத்தத்த சின்னபள்ளியாச மைக் ல முடிச்சு வச்சாரு " .
"அன்சாரப்பா இல்லாத பத்து நா நல்லாவே இல்ல அவரோட கொழப்படி அனவுன்ஸ்மன்டும் கத்திக்கிட்டே ஓதுற பாங்கும் தான் இந்த ஊரோட அழகு, அடயாளம் எல்லாம் ".
"ஒரு வழியா அன்சாரப்பா பத்து நா கழிச்சு வந்து சின்னப்பள்ளியாச ல்ல பாங்கு சொன்னதும் தான் எங்கூட்டூ ஆட்டுக்குட்டிய வெப்பங்கொல திங்குதுனு இளந்தாரி பயலுக ஆலமரத்தடில பேசிகிட்டானுவ. எனக்கு அடக்க முடியாத சிரிப்பு அது தான் நான் கடேசியா சிரிச்சது .
ஆரீபு காக்கா சைக்கிள் கோனார் கடையில் நின்றது .
"கலிமாவுக்கு கோனார் கட போண்டானா ரொம்ப இஷ்டம் . இந்த ரஸூ பய பல்லிக்கொடம் போயிருப்பான் " .
அவனுக்கு ஒன்னு ,கைஜம்மாக்கு ஆரிபாக்கு ஒன்னொன்னு வாங்கிட்டு சேவும்மாவுக்கு போண்டாவொட உளுந்து வட யும் ஆடர போட்டு கோனார் கையுல அஞ்சு ரூவாவ திணிச்சுட்டு லுவர் தொழுவைக்கு நேராக வண்டி சின்னப்பள்ளியாச போயி நின்னது.
அன்சாரப்பா இக்காமத் பலமாக ஒலித்தது.
"அல்லாவு அக்பரு ..."
"அல்லாவு அக்பரு ..."
அன்றைய தினம் வேகமாய் தொழுகைக்கான ஒது கைகால்களை கழுவிக்கொண்டு உள்ளே நுழைந்து ஹஜ்ரத் தொழுகைக்கு பின்னே சேர்ந்த்துக்கொண்டார் ஆரீபு காக்கா.
சடாரென்று பல்லி தலையில் விழ ராவத்தரப்பா பள்ளிவாசலில் கோழிதூக்கம் போட்டு கொண்டிருந்த ஆரீபு காக்கா அன்சாரப்பா வோட தொழுகை யில் நின்றதும் பழைய நினைவுகளை நினைத்ததையும் பழையனவற்றில் மீண்டவாராக ரஹ்மத் பாய் கடையில் தண்ணி வாங்கி முகத்தோடு நினைவுகளையும் சேர்த்து கழுவி கொண்டிருந்தார்.
ஆரீபு காக்கா நிகழ்கால நிசர்தசனத்துக்கு திரும்பியவராக ,
"தன்னோட வெத்தல பொட்டிய தொறந்து கொஞ்சம் காசுகட்டி, குருவி போயிலை வச்சு வெத்தல யுல சுண்ணாம்புலாம் தேய்ச்சு வாயுல மடிச்சு மோள ஆடு கொலய திங்கிற மாதிரி அரச்சுட்டு இருந்தாரு ".
மீண்டும் பழைய நினைவுகளில் ஆரீபு காக்கா ....
"அன்னக்கி நான் லுவர் தொழுவ முடிஞ்சு அல்லாகிட்ட அப்புடி துவா கேட்டு இருக்க கூடாது . எம்புள்ள கலிமாவோட வாழ்க்கைய சீரழிச்ச சாவண்ணா வயும் அவ ஆயீ அப்பனையும் அழிச்சிடுனு கேட்டுபுட்டேன் ..அப்படி அத அல்லாவு கபூலு செஞ்சு அது பலிச்சிடுச்சுனா எம்புள்ள கலிமாவுக்கு கருசமணி அருந்துபோவும், அப்பொரம் எம்பேரப்புள்ளக்கிம் வாப்பா இல்லாம போயுடும். யா ரப்பே ! என்னோட துஆ வ நிராகரிச்சுடு அதுக்கு பதிலா அந்த சாவண்ணா பயல இந்த ஊரோட இழுத்துட்டு வந்துரு ".
" யாரோ மலசியா வுல மலாய்காரீ ஒருத்தியாம் . சாவண்ணாவ வளச்சு போட்டுட்டாளாம் . மலாய்காரி எந்திரினா எந்திரிக்கிறானாம் ! உக்காருனா உக்காரானாம் . சாவண்ணா முடி,நகத்த வச்சு அந்த மலாய்காரி செய்வின செஞ்சுட்டாளாம் ".
"சாவண்ணா பாக்குறதுக்கு அச்சு அசலா அவன் தாயுமாமன் என்ன மாதிரியே இருப்பான் ".
"அந்த காலத்துல அரபு யாவாரி ஒருத்தரு கோட்டபட்டணத்துக்கு வந்தாராம் . இந்த ஊரு மீன்காரிய முஸ்லீமா மாத்தி கலியாணம் பண்ணிணாராம். அதுலேர்ந்து வந்தது தான் இந்த வமுசம்டா னு எங்க அத்தா அடிக்கடி சொல்லுவாரு . அந்த அரபு ரத்தம் தான் சாவண்ணாவ மலாய்காரிக்கு முவ லட்சணமா காட்டியிருக்கும் ".
"நானெல்லாம் சிலோன் நாராமலயுல மூட்ட தூக்குனா அத்துன சிங்களச்சுகளும் வச்ச கண்ணு வாங்காமா பாப்பாளுக. சிங்களச்சிவ எல்லாம் பேச்சு கொடுப்பாவா ஆனா அவளுக்கிட்ட சொல்லுவேன் "
"அழகா இருக்குறது மட்டும் தான் என்னட வம்சத்து அரபு ரத்தம் இல்லடி. உன்ன மாதிரி ஆளுங்க ஒழுக்கமில்லாம நடந்துக்கிட்டா பேசமா ஒதுங்கிக்க சொன்னதும் அந்த அரபு ரத்தம் தாண்டி " அப்படியென்று ஆரீபு காக்கா தன்னுடைய அத்தா தன்னை வளர்த்த விதம் பற்றி மனதில் சிலாகித்து கொண்டார்.
"அத்தா ரொம்ப கண்டிப்பானவரு. எத்தனையோ பேரு சிலோன்ல அவர ரெண்டாம் கலியாணம் பண்ண சொல்லி அழுத்தம் கொடுத்து இருக்காங்க. அதுல முக்கியமான ஆளு எங்க ஊரு முஸ்தபா மாமா ".
முஸ்தபா மாமா சிறிது காலத்திற்கு முன் இறந்து போனார்.
"முஸ்தபா மாமாக்கு ஊருல ஒரு கலியாணம் . திரிகோணமலயுல ஒரு கலியாணம் னு ரெண்டு குடும்பம் அவருக்கு. எங்க அத்தாவும் முஸ்தபா மாமாவும் தான் மொத மொதல்லா கொழும்புக்கு எங்கூர்லேர்ந்து கள்ள தோணில தலமன்னாரு போய் இறங்குனவங்க . எங்கூர்லேர்ந்து தலமன்னாரு சரியா 30 மைலு ராத்திரி வத்தயிலே ஏறுனா இந்தியா பார்டர் போய் காலயுல சேரும். பொழுது விடிஞ்சாப்ல சிங்கள காரன் போட்டுக்கு போயிடலாம் . அங்குனேர்ந்து அஞ்சு ரூவா கொடுத்தா சிங்கள காரனுவ போட்டு தல மன்னாரு ல இறக்கி விடும் "
(தொடரும்)
(தொடரும்)




No comments:
Post a Comment